சென்னை: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜூன். இவரது நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'புஷ்பா 2' திரைப்படம் அடுத்த மாதம் 5ஆம் தேதி உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தின் 'Pushpa 2 Wild Fire Event' நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் அல்லு அர்ஜுன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி மேடையில் புஷ்பா 2 இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பேசும் போது, "மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. புஷ்பா 1 திரைப்படத்தை மிகப் பெரிய பண்டிகையாக கொண்டாடுனீர்கள். புஷ்பா 2 ரிலீஸ் முன்பே பண்டிகையாக மாறியுள்ளது. எனக்கும், அல்லு அர்ஜுன் இருவருக்கும் ரசிகர்களால் தேசிய விருது கிடைத்தது. இப்படம் எனது மிகவும் ஸ்பெஷல்" என்றார்.
பின்னர் ரசிகர்களிடம் தெலுங்கில் பேசிய தேவி ஸ்ரீபிரசாத், சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசினார். புஷ்பா 2 தயாரிப்பாளரை பார்த்து "நான் மேடையில் நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறேன் என்று நினைக்காதீர்கள், நான் பாடல்களை சரியான நேரத்தில் கொடுப்பதில்லை என்று சொல்கிறீர்கள், பின்னணி இசை சரியான நேரத்தில் கொடுப்பதில்லை என்று சொல்கிறீர்கள், நிகழ்ச்சிக்கு சரியான நேரத்தில் வருவதில்லை என்று சொல்கிறீர்கள். என் மீது உங்களுக்கு அதிக அன்பு உள்ளது. அதே நேரத்தில் புகாரும் அதிகம் உள்ளது" என்று பேசினார்.