சென்னை:பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர், ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் (RRR) படம் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தார். தற்போது ஜூனியர் என்டிஆர் தேவாரா பாகம் 1, வார் 2 (War 2) ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தேவாரா முதல் பாகம் (Devara part 1) வரும் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு நடிகர் ஜூனியர் என்டிஆர் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்ட போது தனது இடது கை மணிக்கட்டில் லேசான சுளுக்கு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், மருத்துவர்கள் ஜூனியர் என்டிஆரின் காயமடைந்த கையில் பாதுகாப்பிற்காக பிளாஸ்டர் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். ஜூனியர் என்டிஆர் காயம் ஏற்பட்ட போதும் தனது தினசரி வேலைகளை செய்து கொண்டு, தேவாரா பட கடைசி நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து நடிகர் ஜூனியர் என்டிஆர் நெருங்கிய வட்டாரம் கூறுகையில், ஜூனியர் என்டிஆர் சில நாட்களுக்கு முன்பு ஜிம்மில் உடற்பயிற்சி செய்த போது இடது கை மணிக்கட்டில் சிறிய சுளுக்கு ஏற்பட்டது. அப்போதும் ஜூனியர் என்டிஆர் தேவாரா பட கடைசி நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு முடித்து கொடுத்தார்.