சென்னை: நடிகர் சிலம்பரசன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 50வது படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. பிரபல நடிகரும், டி.ராஜேந்தர் மகனுமாகிய சிலம்பரசன் ‘உறவை காத்த கிளி’ திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் காதல் அழிவதில்லை திரைப்படம் மூலம் கதாநாயகனாக நடித்தார். சினிமாத்துறையில் தனது ஆரம்பக் கட்டத்தில் நடித்த படங்களில் தன்னை ஆக்ஷன் ஹீரோவாக நிலை நிறுத்திக் கொண்டார்.
அது மட்டுமின்றி சிலம்பரசன், பெண்கள் மனம் கவர்ந்த ரொமான்டிக் ஹீரோவாகவும் வலம் வந்தார். 'மன்மதன்' திரைப்படம் மூலம் இளைஞர்களை கவர்ந்தார். தனது தந்தை போல் சினிமாவில் அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்தவராக விளங்கிய சிலம்பரசன், 'வல்லவன்' படத்தை தானே இயக்கி நடித்தார். இப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம் அவரது திரைவாழ்வில் முக்கிய படமாக அமைந்தது.
அதுவரை சிம்புவை வெறும் ஆக்ஷன் ஹீரோவாக பார்த்து வந்த ரசிகர்களுக்கு, கார்த்திக் என்ற கதாபாத்திரம் வேறு பரிணாமத்தை காட்டியது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் சிம்பு, த்ரிஷா கெமிஸ்ட்ரி பெரிய அளவில் பேசப்பட்டது. இதனையடுத்து திரைத்துறையில் வெற்றிகரமாக வலம் வந்த சிலம்பரசன் மீது சரியாக படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.