ஐதராபாத்:பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவின் தந்தை அனில் அரோரா இன்று புதன்கிழமை (செப்.11) காலை தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மும்பை, பாந்திராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அனில் அரோரா இன்று காலை 9 மணி அளவில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
என்ன காரணத்திற்காக அனில் அரோரா தற்கொலை செய்து கொண்டார் என தெரியவராத நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ந்து போன அக்கம் பக்கத்தினர் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நிகழ்விடத்திற்கு விரைந்த போலீசார் அனில் அரோராவின் மரணம் தற்கொலையா அல்லது விபத்தா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
புனேவில் உள்ள மலைக்கா அரோரா தந்தை உயிரிழந்த அதிர்ச்சி தகவலை அறிந்து தற்போது மும்பைக்கு விரைந்து உள்ளார். அனில் அரோராவின் சடலம் மும்பை பாபா மருத்துவமனையில் உள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அனில் அரோராவின் மறைவு செய்தியை கேட்ட மலைக்கா அரோராவின் முன்னாள் கணவர் அர்பஸ் கான் உடனடியாக வீட்டிற்கு விரைந்துள்ளார். அனில் அரோரா உயிரிழந்தது குறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் விரைவில் அவரது மரணத்திற்கான காரனம் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.