அயோத்தி (உத்தரப் பிரதேசம்):பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலத்த காவலுக்கு மத்தியில் கோயிலில் இருந்து அவர் வெளியே வரும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயிலில், கடந்த ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கும்பாபிஷேக நிகழ்வில், பிரதமர் நரேந்தி மோடி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசியல், திரை மற்றும் தொழில் பிரபலங்கள் பங்கேற்றனர். கும்பாபிஷேக நிகழ்வில் அமிதாப் பச்சன் அவரது மகனுடன் பங்கேற்றிருந்தார். 23ஆம் தேதி முதல் கோயிலில் பொதுமக்கள், தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு முன்பாக, அயோத்தியில் 10 ஆயிரம் சதுர அடி அளவிலான நிலத்தை அமிதாப் பச்சன் வாங்கி இருந்தார். இந்நிலையில், இன்று (பிப்.9) அமிதாப் பச்சன் அயோத்தி ராமர் கோயில் சென்று தரிசனம் செய்துள்ளார். வெள்ளை உடை அணிந்து, அதன் மீது காவி நிற கோட் அணிந்த அமிதாப் பச்சன், கோயில் தரிசனத்தை முடித்து விட்டு, பாதுகாவலர்களுக்கு மத்தியில் கோயிலில் இருந்து வெளியேறும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
அமிதாப் பச்சன் தற்போது பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டோர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் கல்கி 2898 ஏடி படித்தில் நடித்து வருகிறார். மேலும், செக்ஷன் 84 என்னும் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: லால் சலாம்; ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவம் பொருந்திய கொடி உடன் திருச்சி ரசிகர்கள்!