சென்னை: தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படம் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பவர் பாண்டி’, ‘ராயன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள மூன்றாவது திரைப்படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், ப்ரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன் என இளம் நடிகர்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தனுஷ் தனது வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படம் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாவதாக ஏற்கனவே அறிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இப்படம் பிப்ரவரி 21ஆம் தேதி தள்ளிப்போகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாவதால், இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக ஜனவரி 31ஆம் தேதியே ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ வெளியாகும் என தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தனுஷ் அடுத்ததாக இயக்கும் ’இட்லி கடை’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தனது எக்ஸ் தளத்தில், ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தை பார்த்துவிட்டு பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில் இத்திரைப்படம் கண்டிப்பாக வெற்றி அடையும் எனவும் கூறியுள்ளார். இத்திரைப்படத்தை ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.
இந்தப் படத்தின் முதல் சிங்கிளான ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையெடுத்து ‘காதல் ஃபெயில்’, ‘யெடி’ என இரு பாடல்கள் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு பாடல்களையும் தனுஷே பாடியுள்ளார். அடுத்ததாக தனுஷ் இயக்கி நடிக்கும் அடுத்த படமான ‘இட்லி கடை’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள ’குட் பேட் அக்லி’ திரைப்படமும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உங்கள் கற்பனைகளை இயக்குநர்களுக்கு கொடுங்கள் - வருத்தத்துடன் பேசிய விஷால்!
இயக்கம் மட்டுமில்லாமல் நடிப்பிலும் அடுத்தடுத்த படங்களை கையில் வைத்திருக்கும் தனுஷ் அடுத்து ’குபேரா’, ராஞ்சனா இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஒரு படம், மீண்டும் ’வாத்தி’ பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் புதிய படம் ஆகியவற்றில் நடிக்கவுள்ளார். இது மட்டுமில்லாமல் ராஜ்குமார் பெரியசாமி, தமிழரசன் பச்சைமுத்து, வெற்றிமாறன் ஆகிய இயக்குநர்களின் படங்களிலும் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.