தேனி: வெங்கடாசலபுரம் கிராமத்தில் ஊருக்குள் சிறுத்தை புகுந்ததாக கிராம மக்களிடையே பரவி வரும் வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சிறுத்தை நடமாட்டம் குறித்து வன அலுவலர்கள் கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் வெங்கடாசலபுரம் கிராமத்தில் ஜனவரி 15ஆம் தேதி ஊரில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதாகவும், அதனை அந்த ஊர் மக்கள் பார்த்ததாகவும் கூறுகின்றனர். அதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடனே இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஊருக்குள் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகக் கருதி, கிராம மக்கள் அச்சத்துடனே இருந்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, பொதுமக்களும் சிலர் சிறுத்தையைப் பார்த்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே கூட வர முடியாமல் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் கடந்த 15ஆம் தேதி காலை 8 மணியளவில் சிறுத்தை ஒன்று சாலையைக் கடப்பது போன்று வீடியோ வெளியாகி அப்பகுதி மக்களிடையே பரவி வருகிறது.
இதையும் படிங்க: கரூரில் களை கட்டிய ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு போட்டி! பரிசுகளை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி!
பின்னர், இதுகுறித்து வனத்துறைக்கும், போலீசாருக்கும் தகவல் கிடைத்த நிலையில், வெங்கடாசலபுரம் கிராமத்திற்கு விரைந்த வனத்துறையினர் மற்றும் வீரபாண்டி போலீசார் சிறுத்தை நடமாட்டம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இது குறித்து தேனி மாவட்ட வனத்துறை அலுவலர் சமர்த்தாவிடம் கேட்டபோது, "வெங்கடாசலபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்போது வரை சிறுத்தை என்று உறுதி செய்யப்படவில்லை. இதுகுறித்து ஊர்மக்கள் அச்சப்படத் தேவையில்லை. அதனைக் கண்காணிக்க வனத்துறை சார்பாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.