கரூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், போக்சோ வழக்கில் காவலரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் கரூர் நகரக் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட வெங்கமேடு காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் நெரூர் ரெங்கநாதன்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளவரசன் (வயது 41). இவர் பணி நிமித்தமாக வெங்கமேடு காவல் நிலையம் அருகாமையில் ஒரு பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், அவரது வீடு அருகே வசித்து வரும் 16 வயது பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, சிறுமியின் தாய் கரூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: பெற்ற மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வீடியோ எடுத்து விற்ற சம்பவம் - மேலும் இருவர் கைது!
அந்த புகாரின் அடிப்படையில், ஜனவரி 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை வழக்குப் பதிவு செய்த, கரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் சனிக்கிழமையான இன்று (ஜனவரி 18) அதிகாலை வெங்கமேடு காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் இளவரசனைக் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது, காவலர் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கரூர் காவல்துறை வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.