நான் ரஜினிகாந்த், இளையராஜா ஆகியோர் பயோபிக்கில் நடிக்க விரும்பினேன் சென்னை: பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை, திரைப்படமாக உருவாக உள்ளது. இந்த படத்தில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார். அத்திரைப்படம் குறித்த அறிவிப்பு விழா, சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ், இயக்குநர் அருண் மாதேஸ்வரன், இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் கங்கை அமரன், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
படத்திற்கு இளையராஜா எனத் தலைப்பிடப்பட்டுள்ள நிலையில், இப்படத்தை கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது. இதற்கு பிரபல ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக உள்ள இப்படத்திற்கு யார் இசையமைப்பது என்பதை அறிவிக்காமல், படக்குழு சஸ்பென்ஸ் வைத்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன் மேடையில் பேசுகையில், “இசையமைப்பாளர் இளையராஜா செய்யும் சாதனைகள், நானே செய்யும் சாதனைகள் போல இருக்கும். எந்த ஒரு பொறாமையும் என்னிடம் கிடையாது. குணாவுக்கும், அபிராமிக்கும் உருவாக்கியது எங்களுடைய காதல் பாட்டு. என் கண்மணிக்கு நான் எழுதிய கடிதம், அதற்குதான் இளையராஜா இசையமைத்தார். இளையராஜாவை பற்றிய படம் எடுக்க வேண்டும் என்றால், 8 பாகங்கள் வரை கூட எடுக்கலாம்.
நான் இப்போது பிறக்காமல், இன்னும் 100 வருடத்திற்குப் பிறகு பிறந்திருந்தாலும், அவர் காலத்தில் தான் நான் வாழ்ந்திருப்பேன். ஏனென்றால், அவர் இசை எப்போதும் இருக்கும். இந்த படம் =இளையராஜாவைப் பற்றிய படம் கிடையாது, பாரத ரத்னா இளையராஜா பற்றிய படம். அழுத்தங்களை கவனிக்காமல், சிறப்பான படத்தை தர வேண்டும் என்ற சிந்தனையோடு செயல்பட வேண்டும்" என்றார்
நடிகர் தனுஷ் பேசுகையில், "நான் இரண்டு பேரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பினேன். ஒன்று நடிகர் ரஜினிகாந்த், மற்றொன்று இளையராஜா. அதில் ஒன்று நடந்துவிட்டது. நான் இளையராஜாவின் பக்தன், ரசிகன். என் தாய் வயிற்றில் இருந்து எனக்கு வழிகாட்டியாக இளையராஜா இருந்து வருகிறார். இசை பற்றியும், இசைஞானி பற்றியும் பேச இன்னொரு நாள் வரும். அப்போது பேசுகிறேன், இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பது எனக்கு மிகப்பெரிய கர்வத்தைக் கொடுக்கிறது" என்றார்.
இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், “ஏதோ ஒரு பெரிய உலகில் இருப்பது போல் இருக்கிறது, பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி உள்ளேன். ஆனால் அவனிடம் (இளையராஜா ) இருப்பது அதிசயம், உண்மையில் இளையராஜா ஒரு அதிசயப் பிறவி. இந்த படம் எடுப்பது மிகவும் கஷ்டம், இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும். தனுஷ் உடன் வேலை செய்தேன். மிரண்டு போய் விட்டேன், கமல்ஹாசன் கலை உலகின் மிகப்பெரிய சொத்து” என்றார்.
இதையும் படிங்க: ஆடு ஜீவிதம்:'16 ஆண்டுகளாக நடந்த சூட்டிங்..இது வெறும் கதையல்ல; ஒரு மனிதனின் வாழ்க்கை' - நடிகர் பிருத்விராஜ்