ஹைதராபாத்:அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான ’புஷ்பா 2’ திரைப்படம் இந்திய அளவில் முதல் நாளில் 175.1 வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று (டிச.05) பிரமாண்டமாக வெளியாகியுள்ளது ’புஷ்பா 2’. கடந்த 2021ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா முதல் பாகம் இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. புஷ்பா முதல் பாகத்திற்காக அல்லு அர்ஜூன் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் தேசிய விருது வென்றனர்.
அல்லு அர்ஜூன் தெலுங்கு சினிமாவில் முதல் தேசிய விருது வென்ற நடிகர் என்ற சாதனையை படைத்தார். இதனைத்தொடர்ந்து பெரும் பொருட்செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் புஷ்பா 2 திரைப்படம் நேற்று வெளியானது. இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படம் முதல் நாள் முன்பதிவிலேயே 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படம் முதல் நாளில் சாக்னில்க் இணையதளம் அறிக்கையின்படி 175.1 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் ஆர்.ஆர்.ஆர் (156 கோடி) திரைப்பட சாதனையை முறியடித்தது. மேலும் உலக அளவில் ஆர்.ஆர்.ஆர். திரைப்பட முதல் நாள் வசூலான 223 கோடியை புஷ்பா 2 திரைப்படம் முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புஷ்பா 2 திரைப்படம் மொழிவாரியாக முதல் நாள் வசூல் விபரம்
- சிறப்புக் காட்சி - 10 கோடி
- முதல் நாள் வசூல் - 165 கோடி
- தெலுங்கு - 85 கோடி
- தமிழ் - 7 கோடி
- ஹிந்தி - 67 கோடி
- கன்னடம் - 1 கோடி
- மலையாளம் - 5 கோடி
புஷ்பா 2 மற்றும் ஆர்.ஆர்.ஆர் திரைப்பட முதல் நாள் வசூல் ஒப்பீடு