சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கியிருந்த 'விடாமுயற்சி' திரைப்படம் கடந்த வியாழக்கிழமை (பிப்.06) திரையரங்குகளில் வெளியானது. முதல் முறையாக இயக்குநர் மகிழ் திருமேனியுடன் இணைந்த அஜித்குமார், ’மங்கத்தா’ திரைப்படத்திற்கு பின் அஜித்துடன் மீண்டும் இணையும் அர்ஜுன் என இந்த படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்ப்பு இருந்தது.
மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித்குமார் நடிப்பில் எந்த படமும் ரிலீஸாகததால் இன்னும் எதிர்பார்ர்பு கூடியது. இதனால் படம் வெளியான முதல் நாள் அஜித் ரசிகர்களால் திருவிழா போல கொண்டாடப்பட்டது. த்ரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.
இவ்வளவு எதிர்பார்ப்புகளையும் ’விடாமுயற்சி’ திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை என்பதை முதல் நாள் வசூலில் இருந்தே தெரிந்துகொள்ள முடிந்தது. ஏனெனில் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவான அளவே ’விடாமுயற்சி’ திரைப்படம் வசூல் செய்தது, சாக்னில்க் (Sacnilk) இணையதளத்தின்படி, விடாமுயற்சி திரைப்படம் முதல் நாளில் இந்தியா முழுமைக்கும் 26 கோடி வரை வசூல் செய்துள்ளது.
வார இறுதி நாட்களில் வசூல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி வார இறுதி முடிந்தும் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை. ஒட்டுமொத்தமாக 100 கோடி ரூபாய் வசூல் செய்யவே திணறி வருகிறது ’விடாமுயற்சி’. சாக்னில்க் இணையதளம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, முதல் நான்கு நாட்கள் முடிவில் விடாமுயற்சி இந்தியாவில் மொத்தமாக சுமார் 61.72 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
வார இறுதி நாட்களான சனிக்கிழமை அன்று 13.5 கோடி ரூபாயும் ஞாயிற்றுக்கிழமை 11.92 கோடி ரூபாயும் விடாமுயற்சி திரைப்படம் வசூல் செய்துள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் சுமார் 95 கோடியில் இருந்து 100 கோடி வரை வசூலித்துள்ளது என கூறப்படுகிறது.