சென்னை: நடிகை ரம்யா பாண்டியனுக்கு தனது காதலருடன் வரும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. பிரபல நடிகர் அருண் பாண்டியன் உறவினரான ரம்யா பாண்டியன், 2015ஆம் ஆண்டில் ’டம்மி பட்டாசு’ என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அறிமுகமான திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், ராஜு முருகன் இயக்கத்தில் ’ஜோக்கர்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
பின்னர் சமுத்திரகனிக்கு ஜோடியாக ’ஆண் தேவதை’ என்ற படத்தில் நடித்தார். நடிகையாக வரவேற்பை பெற்ற ரம்யா பாண்டியன், குக் வித் கோமாளி முதல் சீசனில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் புகழுடன், ரம்யா பாண்டியன் செய்த காமெடிகள் வரவேற்பைப் பெற்றது. பின்னர் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மூன்றாவது இடத்தை பிடித்தார்.
இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியனுக்கு வரும் நவம்பர் 8ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. ரம்யா பாண்டியன், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த யோகா மாஸ்டரான லவெல் தவானை காதலித்து வந்ததாகவும், இவர்களுக்கு ரிஷிகேஷில் கங்கை நதி அருகே திருமணம் நடைபெறுகிறது. ரம்யா பாண்டியன் திருமணம் எளிய முறையில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் நடைபெறும் என கூறப்படுகிறது.