சென்னை:சென்னை ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ் பேரவை டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கில், தமிழ்நாடு அரசின் 2015ஆம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள் மற்றும் 2014-2015ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர்.திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா இன்று (மார்ச் 6) நடைபெற்றது.
இதில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மேலும், சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மயிலை வேலு ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.
இந்த விழாவில் மொத்தம் 39 விருதுகள் வழங்கப்பட்டன. அதில் 34 விருதுகள் திரைப்படங்களுக்கும், 5 விருதுகள் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டன. கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி கவனத்தை ஈர்த்த படங்கள் மற்றும் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படம் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது.
அதில் சூர்யா தயாரித்த முதல் படமான '36 வயதினிலே' திரைப்படத்திற்கு சிறந்த நடிகை உள்ளிட்ட ஏழு விருதுகள் வழங்கப்பட்டன. அதில் நடித்த ஜோதிகா சிறந்த நடிகைக்கான விருதை நேரில் பெற்றுக் கொண்டார். மேலும் 'தனி ஒருவன்' படம் 6 விருதுகளை வென்றது.
அதேபோல், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் வெளியான 'இறுதிச்சுற்று' படமும் 6 விருதுகளை வென்றது. இது தவிர சூர்யா தயாரிப்பில் வெளியான 'பசங்க 2' திரைப்படத்திற்கு நான்கு விருதுகள் வழங்கப்பட்டன.
2015ஆம் ஆண்டு சிறந்த படத்திற்கான முதல் பரிசு 'தனி ஒருவன்' படத்திற்கு வழங்கப்பட்டது. இதனை கல்பாத்தி எஸ்.அகோரம் சார்பாக ரங்கராஜ் பெற்றுக் கொண்டார். இதற்கு ரூ.2 லட்சம் ரொக்கமும், நினைவுப் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. அதேபோல, சிறந்த படத்தின் இரண்டாவது பரிசு 'பசங்க 2' திரைப்படத்திற்காக 1 லட்சம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 'பிரபா' படத்திற்கு ரூ.75 ஆயிரமும் வழங்கப்பட்டது.
அதேபோல, சிறந்த படம் சிறப்பு பரிசாக 'இறுதிச் சுற்று' படத்திற்கு ரூ.75 ஆயிரமும், பெண்களைப் பற்றி உயர்வாகச் சித்தரிக்கும் படம் சிறப்பு பரிசாக '36 வயதினிலே' படத்திற்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டது. அதேபோல, எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் வெற்றி பெற்ற குறும்படங்களுக்கு ஐந்து பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
சிறந்த நடிகைக்கான விருது பெற்ற பின் நடிகர் ஜோதிகா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,"36 வயதினிலே படத்திற்கு சிறந்த நடிகை விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த திரைப்படம் வெளியான பிறகு நிறைய பெண்கள் நாங்கள் தற்போது வேலைக்குச் செல்ல தொடங்கி இருக்கிறோம் என எனக்கு மெசேஜ் அனுப்பினர். மாடித் தோட்ட விவசாயம் செய்வதாக பலர் தெரிவித்தனர். இதுபோன்ற செய்திகளைக் கேட்கும் பொழுது மகிழ்ச்சியாக இருந்தது. விருது எப்போது கிடைத்தாலும் மகிழ்ச்சிதான்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஆரணிக்கு பதில் வேலூர்.. 5 தொகுதிகளில் போட்டியிடும் மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி!