மதுரை: மேலூர் அருகே உள்ள அ.வல்லாளப்பட்டியில் டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்காக அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு நேற்று (ஜன.30) வியாழன்கிழமை பாராட்டு விழா நடத்தினர்.
இந் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அண்ணாமலை, “மேலூர் பகுதி பெரியாற்று பாசனத்தால் ஒரு போக விவசாயம் நடைபெறுகின்ற பசுமையான பூமி. இப்பகுதியில் 250 கோயில்கள் உள்ளன. அதிலும் மதுரையின் சிறப்பாக கருதப்படும் கள்ளழகர் கோயில் உள்ளது. டங்ஸ்டன் திட்டத்திற்கான டெண்டர் வெளியானது குறித்து டெல்லியில் உள்ள அதிகாரிகளுக்கு எதுவும் தெரியாது. அதனால் தான் இந்த ஏல அறிவிப்பை வெளியிட்டுவிட்டனர்.
பிரதமர் மோடி தமிழர்களுக்கு எதிராக எந்தத் திட்டத்தையும் ஒருபோதும் கொண்டுவர மாட்டார். மத்தியில் ஆண்ட கடந்த ஆட்சியினர் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தஞ்சாவூர் போன்ற டெல்டா பகுதியில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கொண்டு வரப்பட்டன. இது குறித்து விவசாயிகள் எனது கவனத்திற்கு கொண்டு வந்தபோது, உடனடியாக டெல்லி சென்று அந்தத் திட்டத்தை ரத்து செய்தோம்.
டங்ஸ்டன் திட்டம் குறித்து 2024ஆம் ஆண்டு தொடக்கத்தில் அறிவிப்பு வெளியானது. ஆனால், ஏலம் நவம்பர் மாதம் தொடங்கியது. அதுவரை, தமிழ்நாடு அரசு டங்ஸ்டன் திட்டத்திற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. மேலும், அடுத்த முறை ஏலம் நடத்தப்படும் போது தான் மக்கள் எதிர்ப்பை பார்த்து தமிழ்நாடு அரசு எதிர்த்தது. டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை எதிர்த்து நமது மக்கள் நடத்திய போராட்டம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
லட்சக்கணக்கானோர் திரண்டு 18 கிலோ மீட்டர் நடைபாதையாக சென்று தல்லாகுளம் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நடத்திய போராட்டம் அறவழி மிகுந்த போராட்டம். முதலில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்வதற்காக மேலூர் பகுதி விவசாயிகளை ஒருங்கிணைத்து, புதுடெல்லி அழைத்துச் சென்றேன். அங்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியுடன் நமது விவசாயிகள் ஆங்கிலத்தில் உரையாடியதை பார்த்து மிகவும் வியந்து போனேன். அவர் உத்தரவாதம் கொடுத்தும், அரசாணை பிறப்பித்தால்தான் ஊருக்கு திரும்புவோம் என விவசாயிகள் உறுதியாக நின்றனர்.
பின், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி 24 மணி நேரத்திற்குள் டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தார். இதே போன்று தான் ஜல்லிக்கட்டு தடையும் 3 அமைச்சரவை சம்பந்தப்பட்டது. அதனையும் பிரதமர் மோடி ரத்து செய்ய வைத்து, தமிழர்களின் பாரம்பரிய பெருமையை மீட்டுக் கொடுத்தார். மாநில அரசின் சட்டமன்ற தீர்மானத்தால் டங்ஸ்டன் சுரங்க திட்ட ரத்து அறிவிப்பு நிகழவில்லை. இவை அனைத்தையும் செய்தது மத்திய அரசு.
இதையும் படிங்க: 'மகாத்மா காந்தி நினைவு நாளை அரசியலாக்காதீர்கள் ஆளுநரே' - அமைச்சர் சாமிநாதன் பதிலடி!
ஆனால், மாநில அரசு இந்த திட்டத்தை ரத்து செய்ய போராடிய 11 ஆயிரம் மக்கள் மீதான வழக்கை இன்னும் ரத்து செய்யவில்லை. முன்னாள் முதலைமைச்சர் காமராஜர் இருந்த போது மேலூர் பகுதியில் சுமார் 70 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயம் நடைபெற்றது. ஆனால், இன்று 40 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் தான் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
இனி மேலூர் பகுதி பசுமை நிறைந்த வேளாண் நிலங்களாக திகழ வேண்டும். அதற்கு ஒரே வழி தமிழக அரசு இந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இது தான் தமிழக அரசிடம் நான் முன்வைக்கும் கோரிக்கை. எங்கள் மீது ஏதேனும் தவறுகள் இருந்தால் நீங்கள் சுட்டிக் காட்டுங்கள். நாங்கள் அதனை திருத்திக் கொள்கிறோம். உங்களுக்காக பாடுபடவே பிரதமர் மோடி எப்போதும் இருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்தார்.