ஹைதராபாத்: நடிகை ஜான்வி கபூர் திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். பிரபல நடிகை ஸ்ரீதேவி, போனி கபூர் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு ’தடக்’ என்ற திரைப்படம் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமான ஜான்வி கபூர், பின்னர் கோஸ்ட் ஸ்டோரிஸ் (Ghost stories), குஞ்சன் சக்சேனா (gunjan saxena), மில்லி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
குஞ்சன் சக்சேனா திரைப்படத்தில் விமானப்படை வீரராக ஜான்வி கபூரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் குட் லக் ஜெர்ரி என்ற படத்தில் நடித்தார். இது தமிழில் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ’கோலமாவு கோகிலா’ திரைப்படத்தின் இந்தி ரீமேக்காகும். கடைசியாக ஜான்வி கபூர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ’தேவரா’ திரைப்படத்தில் நடித்தார். இது ஜான்வி கபூர் நடிக்கும் முதல் தெலுங்கு திரைப்படமாகும்.