திருவள்ளூர்:சின்னத்திரை நடிகை, நடனக் கலைஞர் எனப் பன்முகத்திறமை கொண்டவர் நடிகை சித்ரா. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றின் அறையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது நாசரேத்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சித்ராவின் பெற்றோர் குற்றம்சாட்டியதை அடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், ஹேம்நாத் பிணையில் வெளியில் வந்தார்.
இது தொடர்பான வழக்கின் விசாரணை திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சென்னையில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரியும், விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரியும் சித்ராவின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் சித்ராவின் மரண வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, வழக்கானது மகிளா நீதிமன்ற நீதிபதி ரேவதி முன்னிலையில் இன்று (ஆக.10) விசாரணைக்கு வந்துள்ளது. இதில், இரு தரப்பும் வாதங்களும் நிறைவடைந்த நிலையில், பல்வேறு சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில், சித்ராவின் மரணத்திற்கும் அவரது கணவர் ஹேம்நாத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என சாட்சிகள் பூர்வமாக நிரூபணம் செய்யப்பட்டதால் ஹேம்நாத்தை விடுதலை செய்து திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி ரேவதி உத்தரவிட்டுள்ளார்.