சென்னை:நிகழ்ச்சித் தொகுப்பாளினி, சின்னத்திரை நடிகை, நடனக் கலைஞர் எனப் பன்முகத்திறமை கொண்டவர் நடிகை சித்ரா. பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய தொடரில் முல்லை என்ற கதாபத்திரத்தின் மூலம் அனைவரது உள்ளத்திலும் குடிகொண்டவர் நடிகை சித்ரா.
அந்த சீரியலில் அவரது கதாபாத்திரமும் அவரின் இயல்பான நடிப்பும் ஒவ்வொரு குடும்பங்களிலும் அவரை சென்றடைய வைத்தது. இதன் மூலமாக தனிப்பட்ட ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் கூட்டத்தை தனக்கென உருவாக்கி வைத்திருந்தவர் சித்ரா.
சித்ரா மரணம்: கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் படப்பிடிப்பிற்காக சென்றிருந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் நாசரத்பேட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் சடலமாக மீட்கப்பட்டார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய அதிர்ச்சியை அப்போது ஏற்படுத்தியது. யாருமே எதிர்பார்க்காத வண்ணம் நடந்த இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் மிகப் பெரிய சோகத்தையும் ஏற்படுத்தியது.
இதனை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது நாசரேத்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கின் விசாரணை திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
நீதிமன்றத்தில் காவல்துறை அறிக்கை:சித்ராவின் நடத்தையில் அவரது கணவர் ஹேம்நாத் சந்தேகம் கொண்டதாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டார் என நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்போது, 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதிக்குள் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
2021ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி விசாரணை:சித்திரா மரண வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியபின் 13 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, சித்ரா தற்கொலைதான் செய்து கொண்டார் என நிபுணர்குழு அறிக்கை அளித்துள்ளதாக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஹேம்நாத் ஜாமீன்: சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேம்நாத் தனக்கு ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கக்கூடாது என சித்ராவை வற்புறுத்தியதாகவும், அவரது நடத்தையில் சந்தேகம் கொண்டதாகவும், தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என தெரிவித்திருந்தார்.
மேலும், தனக்கும், சித்ராவுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும், எந்த குற்றமும் செய்யாத தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுவில் அவர் கேட்டிருந்தார். இதனை அடுத்து, சித்ராவின் கணவர் ஹேம்நாத்திற்கு 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.