சென்னை: விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்த போது சங்கத்தின் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக தற்போதைய தயாரிப்பாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியது. மேலும் இந்த விஷயத்தினை சரி செய்யும் பொருட்டு, ஏற்கனவே தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழுவின் பரிந்துரைபடி பொதுக்குழுவில் ஏகமனதாக நடிகர் விஷாலுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் அடிப்படையில் இனிவரும் காலங்களில் நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினை கலந்தாலோசித்து அதன் பின்னர் தங்களது பணிகளை துவங்க வேண்டும் என்று சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், இதற்கு பதில் அளித்து தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நடிகர் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சமீபத்தில் என் பெயரை குறிப்பிட்டு, என் மீது பல அவதூறுகளை சுமத்தி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தி ஒன்று கண்டேன்.
அதில் காணும் Special Auditor அவர்களின் அறிக்கை மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இதுநாள் வரை சங்கம் சார்பாக என்னிடம் முறையாக எவ்வித விளக்கமும் கேட்கப்படாத நிலையில், தங்களின் இப்படி ஒரு பொய்யான பத்திரிக்கை செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன். கடந்த 2017-2019 ஆண்டுகளுக்கான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக அறுதிப் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்றேன்.
நான் சங்க உறுப்பினர்களின் நலனை கருத்தில் கொண்டு, சங்க சட்டவிதிகளின் அடிப்படையில், அதில் செயலாளராக இருந்த கதிரேசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் தீர்மானங்களின்படி, ஆயுட்கால காப்பீடு திட்டம், ஓய்வூதியத் திட்டம், கல்வி உதவித் தொகை, மருத்துவ உதவித் தொகை, திருமண உதவித் தொகை மற்றும் தீபாவளி பரிசு ஆகிய பல்வேறு சிறப்பான உதவித் திட்டங்களை நிர்வாக உறுப்பினர்களின் ஆலோசனைப்படியும், செயற்குழு ஒப்புதல் பெற்ற தீர்மானத்தின்படியும் நாங்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் செயல்படுத்தியுள்ளோம்.
எந்தவித தவறும் செய்யாத பட்சத்தில் தாங்கள் என் மீது தீர்மானம் நிறைவேற்றியதாக பத்திரிகை செய்தி ஏற்புடையதல்ல என்பதை பகிரங்கமாக தெரிவித்துக்கொள்கிறேன். மேற்காணும் நலத்திட்ட உதவிகள் முழுமையாக உறுப்பினர்கள் பயனடைவதற்கு, அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதில் முறைகேடு உள்ளதாக சந்தேகம் இருக்கும் பட்சத்தில், அது தொடர்பாக விளக்கவும், தெளிவுபடுத்தவும் கடந்த கால நிர்வாகத்திற்கு முறையான சந்தர்ப்பம் அளிக்காமல், தாங்கள் நேரடி முடிவெடுத்து ஆதாரமற்ற பழி சுமத்துவது, காழ்ப்பணர்ச்சியின் வெளிப்பாடாகவே அறியப்படுகிறது.