சென்னை: ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் கே.இ. ஞானவேல்ராஜா தயாரிப்பில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள படம் தங்கலான். தங்கலான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் விக்ரம், மாளவிகா, பார்வதி, சிவக்குமார், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், இயக்குநர்கள் பா. ரஞ்சித், ஏ.எல் விஜய், நடன இயக்குநர் சாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விக்ரம், “இந்த மாதிரி படம் எடுக்க தைரியம் வேண்டும். தங்கலான் எனது வாழ்க்கையில் மிக முக்கியமான படம். இந்த படத்தில் எல்லாருமே முக்கிய கதாபாத்திரம். அதையும் தாண்டி நீங்கள் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷின் இசையை உணருவீர்கள். நாங்கள் உணர்ந்து வலி, வேதனை, கஷ்டத்தை ஜி.வி.பிரகாஷ் அழகான இசையாக கொண்டு வந்துள்ளார்.
அதேபோல் இந்த படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்களுக்கும் நன்றி. நடிகர் பசுபதியுடன் நான் நடிக்கும் ஆறாவது படம். இந்த படம் வந்த பிறகு அவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்படும். மாளவிகா, இந்த படத்தில் ஆர்த்தி என்ற கதாபாத்திரத்திற்காக மாளவிகா கஷ்டப்பட்டு நடித்துள்ளார். நாங்கள் இந்த படத்தில் சாதாரண வசனம் பேசினால், அவர் கவிதைகள் போன்றதொரு வசனங்கள் பேச வேண்டும் அது கடினம்.
பார்வதியுடன் நிறைய முறை நடிக்க வேண்டும் என விருப்பம் இருந்தது. இந்த படத்தில் அவருடன் சேர்ந்து நடித்தது மிகவும் சந்தோஷம். எனக்கு பையனாக இப்படத்தில் நடித்துள்ள ஹரி (மெட்ராஸ் ஜானி) அற்புதமான நடிகர். இயக்குநர்கள் அவரை பயன்படுத்த வேண்டும் என்றார். இந்த படம் எல்லோருக்கும் பெரிய படமாக அமையும்.
என்னுடைய சேது, பிதாமகன், அந்நியன் என அனைத்து கதாபாத்திரமும் கஷ்டப்பட்டு தான் நடித்தேன். ஆனால் தங்கலானை ஒப்பிடும் போது அந்த கதாபாத்திரங்கள் வெறும் 8 சதவீதம் தான். ஏன் தங்கலான் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று யோசித்தேன். அப்போது தான் இந்த தங்கலான் கதாபாத்திரம் நமக்கு நன்றாக கனெக்ட் ஆகிறது என்று புரிந்தது.