சென்னை:தயாரிப்பாளரிடம் பேசி இந்த படம் உருவாக ஒட்டுமொத்த காரணமாக இருந்தவர் விஜயகுமார் தான் என இன்று (மே 11) நடைபெற்ற 'எலக்சன்' திரைப்பட செய்தியாளர்கள் சந்திப்பில் அப்படத்தின் இயக்குனர் தமிழ் கூறியுள்ளார்.
சேத்துமான் திரைப்படத்தை இயக்கிய தமிழ் இயக்கத்தில் விஜயகுமார், ப்ரீத்தி அஷ்ரானி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'எலக்சன்'. அடுத்தவாரம் வெளியாக உள்ள இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (மே 11) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் விஜயகுமார், ப்ரீத்தி அஷ்ரானி, இயக்குனர் தமிழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக திரைப்படம் குறித்து நடிகர் விஜயகுமார் பேசுகையில், “உள்ளாட்சித் தேர்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. களம் தேர்தலாக இருந்தாலும், கருத்துக்களை வலிந்து திணிக்காமல், அன்றாட வாழ்க்கையில் அரசியலை அங்கமாக வைத்துள்ள சில கதாபாத்திரங்களை வைத்து, உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஃபேமிலி டிராமாவாக படம் வந்துள்ளது.
படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பிரச்சாரம் செய்வார்கள், ஆனால் படம் பிரச்சாரம் செய்யவில்லை. இக்கதையின் முதுகெலும்பு மரியம் ஜார்ஜ் நடித்துள்ள நல்லசிவம் எனும் கதாப்பாத்திரம். கட்சிக்காக கடுமையாக உழைக்கும் கதாபாத்திரம், நம்மில் அநேக பேர், அது போன்ற கதாபாத்திரங்களை நமது குடும்பத்தில் பார்த்திருப்போம்.
அமாவாசைகள் இருக்கிற அரசியலில் நல்லவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படி இருப்பவர்களை ஏமாளியாக இந்த உலகம் பார்க்கும் போது, அவர்களது குடும்பத்துக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு நியாயமான கோபம் இருக்கும். அப்படி ஒரு மகன் கதாபாத்திரத்தில் தான் நான் நடித்துள்ளேன்.