சென்னை: விஜய் டிவியில் கடந்த 7 சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ’பிக்பாஸ்’. (Bigg Boss) பிரபலங்கள் ஒரே வீட்டில் செல்போன், டிவி என எந்தவித தொழில்நுட்பம் மற்றும் வெளியுலக தொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் இருக்க வேண்டும். பிக்பாஸ் வீட்டில் அனைத்து பகுதிகளிலும், கேமரா பொருத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு வார முடிவிலும் மக்கள் ஓட்டெடுப்பின் அடிப்படையில் ஒருவர் வெளியேற்றப்படுவார்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதியான பிக்பாஸ் நிகழ்ச்சி முதன்முதலில் பாலிவுட்டில் பிரபலமானது. சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய அளவில் பேசப்பட்டது. இதனைத்தொடர்ந்து தென் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலமானது. தமிழில் ஆரம்பம் முதல் பிரபல நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய விதம் பெரும் வரவேற்பை பெற்றது. வார இறுதி நாட்களில் கமல்ஹாசன் வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் டிவி முன் ஆர்வத்துடன் அமர்ந்தனர். இந்நிலையில் தனது படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் 8வது சீசனிலிருந்து விலகுவதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.