சென்னை: இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் சகோதரரும், நடிகருமான உதயா தற்காலிகமாக நடிகர் சங்கத்தில் நீக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நிரந்தரமாக நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் உதயா பேசுகையில், "கடந்த நடிகர் சங்க தேர்தலின் போது பொதுச் செயலாளர் விஷால் தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை வைரஸ் என்று கூறினார். ஒரு பொதுச் செயலாளர் இவ்வாறு பேசலாமா? விஜயகாந்த் கடனிலிருந்து மீட்டு தான் நடிகர் சங்கத்தை நடத்தினார்.
ஆனால் இவர்கள் கடன் வாங்கி கட்டிடம் கட்டுகிறார்கள். நடிகர் சங்கம் கடன் வாங்காமல் செயல்பட வேண்டும் என்று ட்வீட் போட்டதற்கு என்னை ஆறு மாதம் தற்காலிக நீக்கம் செய்தனர். இந்த தற்காலிக நீக்கம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் நீண்டு கொண்டே போனது. அதுமட்டுமில்லாமல் உறுப்பினர்களுக்கு நன்றி கடிதம் எழுதிய இயக்குநர் பாக்யராஜையும் நீக்கம் செய்துள்ளனர். என்னுடைய ஆறு மாத தற்காலிக நீக்கம் முடிந்தது என்று நினைத்து தான் பொதுக்குழு கூட்டத்திற்கு சென்றேன். அங்கு சலசலப்பு ஏற்பட்டு, போலீசார் வந்ததால் அங்கிருந்து சென்று விட்டேன்.
இந்நிலையில் இன்று என்னை நடிகர் சங்கத்திலிருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளனர். நான் என்னுடைய உறுப்பினர் உரிமைக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தேன். அதற்காக என்னை நிரந்தரமாக நீக்குவதா? இவ்வளவு நாள் செயற்குழு கூட்டம் நடந்தது. அப்போது எல்லாம் என்னை நீக்காமல் இப்போது என்னை நீக்குவதற்கான காரணம். நான் தேர்தலில் போட்டியிடுவேன் என்ற பயமா? எனக்கு உறுப்பினர் உரிமை தேவை இல்லை. ஆனால் இவர்கள் செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னை நீக்கியதால் நான் வாங்கி கொடுத்த ரூ.3 கோடி பணத்தை திரும்ப தருவார்களா? என்று கேள்வி எழுப்பினார்.