சென்னை: இயக்குநர் பாலா 25 ஆண்டுகள் பாராட்டு விழாவில் நடிகர் சூர்யா எமோஷனலாக பேசியுள்ளார். பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்த ’சேது’ திரைப்படம் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்றது. பாலா இயக்கத்தில் முதல் படமான சேது (1999), விக்ரம் திரை வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய படமாக அமைந்தது. இயக்குநர் பாலா திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் கடந்த 18ஆம் தேதி திரைத்துறை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
மேலும் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படத்தின் ஆடியோவும் அன்று வெளியிடப்பட்டது. இந்த விழாவில் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, சிவகார்த்திகேயன் அருண் விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா மேடையில் இயக்குநர் பாலா குறித்து சூர்யா எமோஷனலாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் பேசுகையில், "இயக்குநர் பாலா இயக்கிய முதல் படம் சேது அவ்வளவு பெரிய தாக்கத்தை கொடுத்தது. அப்படம் பார்த்து சில நாட்கள் நான் தூங்கவில்லை.
அவ்வளவு பெரிய படத்தை இயக்கிய பாலா, இரண்டாவது படத்தை என்னை வைத்து இயக்கினார். அவர் எப்படி என்னை நம்பினார் என தற்போது வரை யோசித்து வருகிறேன். நந்தா படம் என் வாழ்க்கையை மாற்றியது. கும்பகோணம் கோயிலில் மொட்டை அடித்து கொண்டு பின்னணியில் சின்னத்தாயவள் பாடலோடு எடுக்கப்பட்டது. அவரிடம் சின்ன சின்ன அசைவுகள் கூட நடிப்பில் கற்றுக் கொண்டது என அனைத்தும் என் நினைவில் உள்ளது” என்றார்.