சென்னை: விஜய் தேவர்கொண்டாவின் அடுத்த படத்தின் தமிழ் டீசருக்கு சூர்யா டப்பிங் பேசியுள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ள திரைப்படம் 'VD12' என தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
தெலுங்கு சினிமாவில் 'Pelli choopulu' திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிகுமகமானார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் 'அர்ஜூன் ரெட்டி' படத்தில் நடித்தார். இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் அர்ஜூன் ரெட்டி திரைப்படம் மூலம் இளைஞர்கள் மனதில் விஜய் தேவரகொண்டா இடம்பிடித்தார்.
பின்னர் ராஷ்மிகா மந்தனாவுடன் விஜய் தேவரகொண்டா நடித்த திரைப்படம் 'கீதா கோவிந்தம்'. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் இருவரது கெமிஸ்ட்ரி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டா சாக்லேட் பாயாக வலம் வரத் தொடங்கினார். இதனையடுத்து விஜய் தேவரகொண்டா நடித்த 'நோட்டா', 'டியர் கொம்ராட்', 'லிகர்', 'குஷி', 'ஃபேமிலி ஸ்டார்' ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.