சென்னை:கொட்டுக்காளி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன், சூரி, லிங்குசாமி, மிஷ்கின், வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய சிவகார்த்திகேயன், “நான் உலக சினிமாக்களை பார்த்ததில்லை. கூழாங்கல் படம் பார்த்தேன் எனக்கு பிடித்திருந்தது.
Quandum என்ற அறிமுக இயக்குநர்களுக்கான விருது வழங்கும் விழாவில் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கிய கூழாங்கல் படத்திற்காக தேர்வு செய்திருந்தனர். இதற்கு முன்னர் யாரெல்லாம் இந்த விருதை வாங்கி இருக்கிறார்கள் என்று கேட்டேன். அப்போது கிறிஸ்டோஃபர் நோலன் வாங்கி இருக்கிறார் என்று கூறினர்.
கிறிஸ்டோஃபர் நோலன் வாங்கிய அந்த விருதை மதுரையில் பிறந்த பி.எஸ்.வினோத்ராஜ் வாங்கி இருக்கும் போது ஏன் அந்த இயக்குநரை கொண்டாட மறந்தோம் என்று நினைத்தேன். பி.எஸ்.வினோத்ராஜை கொண்டாடுவதற்காகவே ஒரு படம் எடுக்க வேண்டும் என்று இந்த படத்தை எடுத்தேன்.
யாரையும் கண்டுபிடித்து, நான் அவரை வளர்த்துவிட்டேன், வாழ்க்கை கொடுத்தேன் என சொல்ல மாட்டேன். என்னை அப்படி சொல்லியே பழக்கிவிட்டார்கள். அந்த மாதிரி ஆள் நான் கிடையாது என்றார். நான் சினிமாவில் வந்ததற்கு ஒரு பெருமையாக இந்த கொட்டுக்காளியை பார்க்கிறேன். நிச்சயமாக ஒரு புது அனுபவத்தை இந்த படம் கொடுக்கும்.
இந்த படம் தியேட்டரில் ஓடி என்ன வசூல் செய்தாலும் சந்தோஷம் தான். இப்படி ஒரு படத்தை மக்கள் பார்க்க உள்ளே வருவதே சந்தோஷம் தான். வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவத்தால் தான் விடுதலை போன்ற படங்களை சூரி எளிதில் நடிக்கிறார். நான் கல்லூரி படிக்கும் போது ஒரே ஆண்டில் நடிகர் விக்ரமுக்கு சாமி, தூள், பிதாமகன் என ஹாட்ரிக் வெற்றி அமைந்தது.
அதேபோல், சூரிக்கும் கருடன், கொட்டுக்காளி, விடுதலை 2 என ஹாட்ரிக் வெற்றியாக அமையும் என்று நினைக்கிறேன். இந்த சினிமாத் துறையில் இயக்குநர்களாவது ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பது பெருமையாக உள்ளது. என் அண்ணன் வெற்றி பெற்றால் நான் வெற்றி பெற்ற மாதிரி என்றார் ” என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் சூரி, "இப்படி ஒரு படத்தில் நான் இருக்கிறேன் என்பதில் சந்தோஷம். ஒவ்வொரு முறையும் இப்படத்தில் சூரி நன்றாக நடித்துள்ளார் என்று சொல்லும் போது சிலிர்க்கிறது. அமெரிக்காவில் பல இயக்குநர்கள் கொட்டுக்காளி படத்தை பார்த்தனர். இந்த ஒரு படத்தை வைத்து பல நாடுகள் சுற்றிவிட்டேன். வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி" என்று கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:இந்த படத்தை மக்கள் பார்க்கவில்லை என்றால்.. இயக்குநர் மிஷ்கின் சர்ச்சை பேச்சு! - Mysskin controversy