சென்னை:ஒரு திரைப்படத்திற்கு பெயர் என்பது அப்படத்திற்கான முகவரி போன்றது. ரசிகர்களை ஈர்க்கக்கூடிய பெயரை வைக்க அனைவரும் கஷ்டப்பட்டு யோசித்து பல்வேறு பணிகளை செய்து வருகிறார்கள். படத்தின் பெயர் கொஞ்சம் சுமராக இருந்தாலும் சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்யப்பட்டுவிடும். எனவே அதில் மிக கவனம் செலுத்தி வருகின்றனர் திரைத்துறையினர்.
ஒரே படத்தின் பெயரை இரண்டு படக்குழுவினர் அவரவர் படங்களுக்கு சூட்டுவது பின்பு சமரசம் மேற்கொள்வது ஒன்றும் புதிதல்ல. அப்படி தற்போது புதிதாக ஒரே தலைப்பிற்காக நடிகர் சிவகார்த்திகேயனும் விஜய் ஆண்டனியும் போட்டி போடுகிறார்கள். 73 ஆண்டுகளுக்கு முன்பு சிவாஜியின் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற பராசக்தி படத்தின் தலைப்புக்கு தான் இந்த போட்டி.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மோகன் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் அறிவிப்பு டீசர் நேற்று மாலை வெளியானது. படத்திற்கு ‘பராசக்தி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஆகாஷ் பாஸ்கரன் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.
இப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 25வது படம். அத்துடன் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் 100வது படமாகும் . நேற்று மாலை டீசர் வெளியாகும் என சில நாட்களுக்கு முன்பு அறிவித்ததிலிருந்து, படத்தின் தலைப்பு ’பராசக்தி’ தான் என இணையத்தில் தகவல் வெளியானது. அதற்கு சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் கண்டனங்களும் தெரிவித்தது.
ஆனால் நேற்று (ஜன.29) மாலை இந்த டீசர் வெளியாவதற்கு முன்பு காலை 11 மணியளவில் விஜய் ஆண்டனி தனது 25வது படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். அதில் அந்த படத்திற்கு தமிழில் ’சக்தித் திருமகன்’ என்றும், தெலுங்கில் ’பராசக்தி’ என்றும் தலைப்பு வைத்துள்ளதாக அறிவித்திருந்தனர். ’அருவி’, ’வாழ்’ ஆகிய படங்களை இயக்கிய அருண் பிரபு இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் வாகை சந்திரசேகர், சுனில் கிரிப்லானி, செல் முருகன் ஆகியோர் நடிக்கின்றனர். விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிக்கும் இத்திரைப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என போஸ்டரில் தெரிவித்துள்ளனர்.