ஹைதராபாத்: ‘புஷ்பா 2’ திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு கூடியிருந்த கூட்டம் குறித்து நடிகர் சித்தார்த் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி வெளியான திரைப்படம் ’புஷ்பா 2’. புஷ்பா முதல் பாகம் மாபெரும் வெற்றி அடைந்ததால் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது.
'பாகுபலி' திரைப்படத்திற்கு பிறகு 'புஷ்பா' திரைப்படம் தெலுங்கு சினிமாவிற்கு முக்கியமான படமாக அமைந்தது. தென்னிந்தியாவை விட புஷ்பா முதல் பாகத்திற்கு வட இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றது. ’புஷ்பா 2’ வெளியாகி இதுவரை 5 நாட்களில் 332 கோடி என்ற இமாலய வசூலை பெற்றுள்ளது. இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பிஹார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் அலை மோதியது.
ஒரு சினிமா நிகழ்ச்சிக்கு இந்தியாவில் அதிக கூட்டம் கூடிய நிகழ்வு என்ற சாதனை படைத்தது. இதனைத்தொடர்ந்து நடிகர் சித்தார்த் புஷ்பா 2 டிரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்வு குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனியார் யூடியூப் சேனலுக்கு பேசிய சித்தார்த், “கூட்டத்தை கூட்டுவது மார்க்கெட்டிங், அது பிரச்சனை கிடையாது. நமது ஊரில் கட்டுமான பணிக்கு JCB வைத்தால் கூட கூட்டம் கூடும். பிஹாரில் கூட்டம் கூடுவது ஒரு விஷயம் அல்ல. ஒரு மைதானத்தில் படத்தின் பாடல் போட்டால் கூட்டம் கூடும்.
இதையும் படிங்க: 2024ஆம் ஆண்டு குறைந்த பட்ஜெட்டில் வசூலை வாரி குவித்த திரைப்படங்கள் என்ன தெரியுமா?
கூட்டம் கூடுவதற்கும், குவாலிட்டிக்கும் சம்பந்தம் கிடையாது. அப்படி பார்த்தால் அனைத்து அரசியல் கட்சியும் ஜெயிக்க வேண்டும். அரசியல் கட்சி எல்லாருக்கும் கூட்டம் கூடும். எங்கள் காலத்தில் பிரியாணி, குவாட்டர் பாக்கெட் என கூறுவார்கள். கரகோஷம் வாங்வது எளிதான ஒன்று” என கூறியுள்ளார். முன்னதாக சித்தார்த் நடித்துள்ள ’மிஸ் யூ’ திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சித்தார்த், புஷ்பா 2 திரைப்படம் வெளியாவது எனக்கு கவலை கிடையாது என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.