சென்னை: ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணாமூர்த்தி தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா முரளி, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நிறங்கள் மூன்று'. வரும் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் அதர்வா, ரகுமான், அம்மு அபிராமி, இயக்குநர் கார்த்திக் நரேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கார்த்திக் நரேன் பேசுகையில், “பல காரணங்களுக்காக 'நிறங்கள் மூன்று' திரைப்படம் எனக்கு ஸ்பெஷல். ஏனெனில், பல வருடங்கள் கழித்து தியேட்டரில் என் படம் வெளியாகிறது. படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப குழு அனைவருக்கும் நன்றி. கதை கண்டிப்பாக பார்வையாளர்களுக்கு வித்தியாசமாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.
நடிகர் ரஹ்மான் பேசும் போது, ”இந்த வருடம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். என்னுடைய ஐந்து படங்கள் வெளியாகியுள்ளது. தமிழில் இரண்டு படங்கள் வெளியாகியுள்ளது. 'நிறங்கள் மூன்று' என்ற வித்தியாசமான கதையில் நான் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. 'துருவங்கள் பதினாறு' படத்திற்கு பிறகு எனது கரியர் முற்றிலும் மாறியது. இப்போது 'நிறங்கள் மூன்று' படத்திலும் அதே நம்பிக்கை உள்ளது. 'துருவங்கள் பதினாறு' படத்திற்கு முன்பே நரேன் வைத்திருந்த கதை இது. படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்.