திருச்சி: நடிகர் பிரசாந்த், நடிகை பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'அந்தகன்' திரைப்படம் வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரசாந்த், " 'அந்தகன்' காமெடி மற்றும் த்ரில்லர் கலந்த படமாக வந்துள்ளது. பான் இந்தியா படமாக தமிழில் முதன் முறையாக ஜீன்ஸ் படம் தான் வெளியானது. அதுபோன்று தற்போது எந்த படம் எடுத்தாலும் அது அனைத்து மொழிகளிலும் வெளியாகிறது. இந்த படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே குவிந்துள்ளதுடன் சிரமம் எடுத்து இந்த படத்தை தயாரித்துள்ளோம்.
தமிழ்நாடு முழுவதும் 350 முதல் 400 திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. இந்த படத்தில் கண்பார்வையற்ற நபராக மிகுந்த சிரமம் எடுத்து நடித்துள்ளேன், பாடல் காட்சிகளும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளதுடன் இந்த படம் மக்களிடம் சிறப்பாக சென்றடையும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். திரைப்பட விமர்சனங்களை எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். இயக்குநர் ஷங்கருடன் மீண்டும் இணைவது குறித்த கேள்விக்கு, கதைக்கேற்ப நான் தேவைப்பட்டால் நிச்சயம் மீண்டும் இயக்குநர் ஷங்கருடன் இணைந்து நடிப்பேன் என தெரிவித்தார்.
மேலும் தற்போது ஆடியன்ஸ் ரசனை மாறிவிட்டது, முன்பு ஆக்ஷன் மற்றும் காதல் படங்கள் அதனை பின்தொடர்ந்து நடித்து வந்தோம். 5 வருடத்திற்கு முன்பு கதை மையமாக இருந்தது தற்போது திரைக்கதை மையமாக உள்ளது. நல்ல ஸ்கிரீன் ப்ளே உள்ள கதை நல்ல வெற்றியை பெறுகிறது. பெரிய பட்ஜெட் படம், சிறிய பட்ஜெட் படம் என்பதை மக்கள் பார்ப்பதில்லை கதை மற்றும் திரைக்கதை நன்றாக இருந்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். காலத்திற்கு ஏற்ப ஓடிடி தளங்களையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.
ரீல்ஸ் நல்லது தான்:இன்றைய இளைஞர்கள் அதிகமாக ரீல்ஸ் மோகத்தில் உள்ளதற்கான காரணம் குறித்த கேள்விக்கு, ரீல்ஸ்களில் நீங்களே கேமராமேன், நடிகர், டைரக்டர் ஆகலாம் என்ற பட்சத்தில் இளைஞர்கள் கிரியேட்டிவிட்டியை வெளிக்கொண்டு வர ஒரு வாய்ப்பாக உள்ளது. நிலையில், அதே நேரம் ரீல்ஸ் செய்யும் போது பாதுகாப்புடன் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும்.