சென்னை: நடிகர் மோகன்லால் த்ரிஷயம் 3ஆம் பாகம் குறித்து பேசியுள்ளார். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடித்து கடந்த 2013இல் வெளியான திரைப்படம் ‘த்ரிஷயம்’ (Drishyam). இப்படம் இந்தியா அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. ஒரு சாமானியன் தனது குடும்பத்திற்கு ஏற்படும் பிரச்சனையை எவ்வாறு சமாளித்து அவர்களை காப்பாற்றுகிறார், தனது புத்திசாலித்தனத்தால் எவ்வாறு தப்பிக்கிறார் என்பதே த்ரிஷயம் திரைப்படத்தின் கதை.
மிகவும் சாதாரண கதையை கொண்டு, சீட் நுனியில் அமர வைக்கும் அளவுக்கு விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் படமாக த்ரிஷயம் படத்தை ஜீத்து ஜோசப் உருவாக்கியிருந்தார். இந்த படத்தில் மோகன்லால் உள்ளிட்ட நடிகர்கள் மிகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றனர். மலையாளத்தில் உருவான த்ரிஷயம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்திய சினிமாவையே திரும்பிக் பார்க்க வைத்த த்ரிஷயம் திரைப்படம், மலையாள சினிமாவின் தலையெழுத்தையே மாற்றியது. இது மட்டுமின்றி சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்திய படம் என்ற பெருமையை த்ரிஷயம் பெற்றது. தமிழில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து ’பாபநாசம்’ என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டது. த்ரிஷயம் இரண்டாம் பாகமும் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.