சென்னை:மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினரைப் பாராட்டி நடிகர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மஞ்சும்மல் பாய்ஸ் படம்: கொடைக்கானலில் உள்ள குணா குகையில் சிக்கிக்கொண்ட நண்பரை மீட்கப் போராடும் நண்பர்களின் கதைதான் 'மஞ்சும்மல் பாய்ஸ்'. கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவின் மஞ்சும்மல் பகுதியிலிருந்து கொடைக்கானல் பகுதிக்குச் சுற்றுலா சென்ற நண்பர்கள் குழு அங்குள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களையும் பார்த்துவிட்டு குணா குகைக்குச் சென்றுள்ளனர்.
அப்போது இவர்களின் நண்பர்களின் ஒருவரான சுபாஷ் என்பவர் ஆழமான குகைக்குள் சிக்கிக் கொள்கிறார். அங்குச் சிக்கியவர்கள் யாரும் உயிருடன் மீண்டதில்லை. ஆனால், சுபாஷ் உயிருடன் இருக்க அவரை எப்படி நண்பர்கள் காப்பாற்றினார்கள் என்பதே இப்படத்தின் கதை. கடந்த 2006ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது தான் இப்படம்.
இந்த படத்தில் ஒரு முக்கிய இடத்தில், குணா படத்தில் இடம்பெற்ற 'கண்மணி அன்போடு காதலன்' என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை ஏ.சிதம்பரம் இயக்கியுள்ளார். கடந்த பிப்.22ஆம் தேதி மலையாள மொழியில் வெளியான இப்படம் தமிழகத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
புதிதாக வெளியான தமிழ் படங்கள் பெரிதாக வெற்றி பெறாத நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. நாளொன்றுக்கு 100க்கும் மேற்பட்ட காட்சிகள் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் படக் குழுவினரைச் சென்னை அழைத்து தனது அலுவலகத்தில் வைத்து நடிகர் கமல்ஹாசன் பாராட்டினார். இவரைத் தொடர்ந்து நடிகர்கள் தனுஷ், விக்ரம் உள்ளிட்ட பலரும் பாராட்டினர். தமிழ் பிரபலங்கள் பலரும் அழைத்துப் பாராட்டிய புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினருடன் கலந்துரையாடிய வீடியோவை ராஜ் கமல் ஃப்லிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க:மேனகா, வருண் காந்தி பிரிஜ் பூஷன் சிங்கிற்கு சீட் மறுப்பா? உ.பியில் பாஜக திட்டம் என்ன?