கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு 56க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், 150 பேருக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் நடிகர் கமல்ஹாசன்.
நடிகர் கமல்ஹாசன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இதை அரசியல் ஆதாயமாகவோ, விமர்சனமாகவும் பார்ப்பதை விட நாம் அனைவருக்கும் ஓர் கடமை உள்ளது. இப்போதுதான் ஒருவர் வீட்டில் இது தொடர்பாக பேசிக் கொண்டிருந்தேன். வள்ளுவருடைய குறளில் கள் உள்ளது. ஆகவே மது என்பது அப்போதிலிருந்து நமக்குள் வந்து கொண்டிருக்கிறது.
இந்த சாராயத்தை விற்கும் எந்த ஒரு அரசாக இருந்தாலும், அதிலிருந்து வரும் வருமானத்தை இவ்வாறு பாதிக்கப்படும் மக்களுக்குக் கொடுக்க வேண்டும். மதுக்கடைகளை உடனே மூடினால் மட்டும் எல்லாம் முடிந்துவிடும் என்பது தவறான கருத்து. அது சரியாகாது. சாலை விபத்து நடைபெறும் என்பதால் போக்குவரத்தை நிறுத்த முடியாது.
குடிக்காதே என்று சொல்ல முடியாது. குறைவாக மது அருந்துங்கள் என்று அறிவுரை கூறும் இடங்கள், மதுக்கடை அருகிலேயே இருக்க வேண்டும். மருந்துக் கடைகளை விட டாஸ்மாக் கடைகள் அதிகம் உள்ளன. பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்துவது என்பது சாத்தியமற்ற ஒன்று.
இதற்கு அமெரிக்கா ஒரு எடுத்துக்காட்டு அவர்கள் பூரண மதுவிலக்கு கொண்டு வந்ததால் நடந்த விளைவுகள் உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஆளும் அரசாங்கம் இதற்கு முன் ஆண்ட அரசாக இருக்கட்டும். யாராலையும் மதுவினைக் கட்டுப்படுத்த முடியாது” என்று கூறினார்.
முன்னதாக, தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் கள்ளக்குறிச்சிக்கு வருகை புரிந்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களது உடல் நலம் குறித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு தவெக நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க:முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு: மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் - PG neet exam postponed