சென்னை: இயக்குநர் கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி, காஷ்மீரா, இளவரசு, பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் பி.டி.சார். இப்படத்தின் வெற்றிக்கு நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர்கள் ஹிப்ஹாப் ஆதி, பாக்யராஜ், இளவரசு, இயக்குநர் கார்த்திக் வேணுகோபால், இளவரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேடையில், நடிகர் இளவரசு பேசும்போது, "வேணுகோபாலுக்கு நான்தான் நன்றி சொல்ல வேண்டும். ஒருசில படங்கள் கதை கேட்கும்போது நமக்குள் ஆவி புகுந்த மாதிரி இருக்கும். ஒரு காலகட்டத்தில் ஆண்கள், பெண்களுக்கு வரையறை இருந்தது. ஹிப்ஹாப் ஆதிக்கு எனது வாழ்த்துக்கள்" என்றார்.
இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது, "இந்த படத்தில் நான் முதலில் நாயகன் ஆதிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். நல்ல இயக்குநரை கொண்டுவர நினைத்தார், அதற்கு நன்றி. பெண்கள் மீது ஆண்களுக்கு ஒருவித ஈர்ப்பு உண்டு என்று நினைக்கிறேன். இளவரசு இப்படத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்" என்றார்.
பின்னர், நடிகர் ஆதி பேசும் போது, "ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. படம் தற்போது வரை ஹவுஸ் ஃபுல் ஆக ஓடிக் கொண்டிருக்கிறது. திரையரங்குகளில் பேசும்போது இன்னும் நம்பிக்கை உடன் இருக்கிறார்கள். எல்லா விமர்சனங்களையும் படித்தேன், பார்த்தேன். உங்களது பாராட்டுகளுக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை எடுத்துக் கொண்டு இன்னும் என்னை மெருகேற்றி நல்ல படங்களில் நடிக்க முயற்சி செய்துகொண்டே இருப்பேன்.
ஒரு ஊரில் மில்லில் வேலை செய்யும் பெண்களுக்கு இப்படத்தை இரண்டு காட்சிகள் போட்டார்கள் என்ற செய்தியை தயாரிப்பாளருக்கு காட்டினேன், பத்து மடங்கு மகிழ்ச்சியடைந்தார். இந்த படம் லாபம் பெற்றதை விடவும், சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தியது என்ற செய்தி தயாரிப்பாளருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்த படத்தில் இயக்குநர் பாக்யராஜின் பங்கு முக்கியமானது" என்று பேசினார்.