சென்னை: டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க். இவர் இன்று (ஜூன் 11) தனது எக்ஸ் தளத்தில் மீம்ஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த மீம்ஸில் உள்ள புகைப்படம் தப்பாட்டம் என்ற தமிழ் படத்தின் போஸ்டராகும். ஒரு இளநீரை நாயகி ஸ்டிரா வைத்துக் குடிக்க, அதை நாயகன் இன்னொரு ஸ்டிரா மூலம் குடிப்பது போன்ற அந்த புகைப்படம், கடந்த 2017ஆம் ஆண்டு முஜிபுர் ரகுமான் இயக்கத்தில் வெளியான தப்பாட்டம் படத்தின் காட்சியாகும்.
இதில் துரை சுதாகர் நாயகனாக நடித்திருந்தார். இவர் தற்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார். எலான் மஸ்க் பகிர்ந்துள்ள இந்த புகைப்படம் ஐபோன், ஆப்பிள், ஓபன் ஏ.ஐ. (OPEN AI) வைத்து யாரோ ஒருவர் இந்த மீம்ஸை உருவாக்கியுள்ளார். இதை எலான் மஸ்க் பகிர்ந்துள்ளதன் மூலம் உலகளவில் இந்த புகைப்படம் பிரபலமாகியுள்ளது.
இதுகுறித்து துரை சுதாகர் கூறியதாவது, “காலையில் இருந்தே அழைப்புகள் வந்துகொண்டே இருக்கிறது. தப்பாட்டம் படம் என்னுடைய முதல் படம். சின்ன வயதில் இருந்தே நான் பார்த்து வளர்ந்த பல விஷயங்களை அதில் சொல்லி இருந்தோம். குறிப்பாக, தப்பாட்டம் என்று சொல்லப்படும் பறை இசைக் கலை பற்றியும், எவரோ சொல்வதை எண்ணி ஒரு பெண் மீது அவதூறு சொல்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் சொன்ன படம். தப்பாட்டம் படம் எனக்கு நல்ல நண்பர்களை சினிமாவிற்குள்ளும், சினிமாவிற்கு வெளியேயும் கொடுத்தது. அதன் விளைவால் தான் களவாணி 2, பட்டத்து அரசன் உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.