சென்னை: லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று (ஜனவரி 16) வியாழக்கிழமை வெளியாகியுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
"பிரேக்டவுன்" என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக்தான் ‘விடாமுயற்சி’ திரைப்படம். இப்படம் வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் இன்று 6:40 மணியளவில் வெளியாகியுள்ளது. காணும் பொங்கலை முன்னிட்டு வெளியான "விடாமுயற்சி" டிரெய்லரை உலகம் முழுவதும் உள்ள அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
டிரெய்லர் வீடியோவில், “கொஞ்ச நாளா ஏன் உலகமே என்ன சுத்தி நுடங்கிட்டிருக்கு, எனக்கு இந்த தலைமுறைப் பற்றி தெரியாது, ஆனால், நாம சின்னப் பிள்ளையா இருந்தப்போ வாட்ச் கெட்டுப் போச்சுனா ரிப்பேர் பண்ணுவோம், டிவி கெட்டுப்போச்சுனா ரிப்பேர் பண்ணுவோம். ஆனால், தூக்கிப் போடமாட்டோம். அதான் டெஸ்டினி என்றும் I'm so lost, I'm not Hear to fight” என டிரெய்லரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் அஜித் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.
மேலும், அஜித்தின் சண்டை காட்சிகள், கார் ரேஸிங் என படத்தின் முழு டிரெய்லரும் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. தொடர்ந்து, “அவன் என்னை பார்க்கும் போது அந்த தருணத்தை அவன் ஆயுளுக்கும் மறக்கக் கூடாது” என த்ரிஷா வசனம் பேசியுள்ளார். மேலும், விடாமுயற்சி படம் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகும் என்றும் டிரெய்லரில் அறிவிக்கப்பட்டுள்ளது.