சென்னை:தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவரது படங்கள் வெளியாகும் நாளை ரசிகர்கள் தீபாவளி பண்டிகை போல் கொண்டாடுவது வழக்கம். இவரது நடிப்பில் கடைசியாகத் 'துணிவு' படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து ஒரு வருடத்திற்கு மேலாக எந்த படமும் வெளியாகவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் அஜித்தின் அடுத்த படத்துக்காக பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்தின் அடுத்த படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அது குறித்து எந்த அப்டேட்டும் இல்லை, அதன்பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் 'விடாமுயற்சி' என்ற படத்தில் அஜித் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இப்படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக அசர்பைஜானில் நடந்து வருகிறது. இப்படத்தில் அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடந்து வருவதால், அஜித் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி விட்டார். வழக்கமாக ஒரு படத்தை முடித்துவிட்டுத் தான் அஜித் தனது புதிய படத்தைத் தொடங்குவார். ஆனால் இம்முறை 'விடாமுயற்சி' தாமதம் ஆவதால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தில் ஒப்பந்தமாகி அதன் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.