சென்னை: அஜித்திற்கு சினிமாவை தாண்டி பைக் மற்றும் கார் பந்தயங்களில் ஆர்வம் அதிகம். மங்காத்தா, ஆரம்பம், வலிமை ஆகிய படங்களில் சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் தானே பைக் ஓட்டி அசத்தியிருப்பார். சினிமா பயணத்திற்கு முன்பு மெக்கானிக்காக பணிபுரிந்து வந்த அஜித் குமார், தற்போதும் கூட சினிமா படப்பிடிப்பு இடைவேளையில் கார் அல்லது பைக் ஓட்டுவதில் விருப்பம் காட்டிவருகிறார்
அதுமட்டுமின்றி தனது சினிமா பயணத்திற்கு முன்பிருந்தே பல்வேறு கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று அசத்தியுள்ளார். எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த வலிமை படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தனது பைக்கில் இந்தியா முழுவதும் 4500 கி.மீ பயணம் செய்து ஆச்சரியப்படுத்தினார்.
மேலும் பைக், கார் மீது அஜித் கொண்டிருக்கும் ஆர்வத்தை தொழில்துறை முயற்சியாக மாற்றும் விதத்தில் ஏகே மோட்டோ ரைடு என்ற நிறுவனத்தை தொடங்கினார். தற்போது நடித்துவரும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்துவிட்டு சினிமாவிலிருந்து கார் ரேஸில் கவனம் செலுத்தவுள்ளார் என்ற பேச்சுகளும் கோலிவுட் வட்டாரத்தில் அடிபடுகிறது.
இந்நிலையில் அஜித் குமாரின் செய்தித் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா சமீபத்தில் வெளியிட்ட பதிவில் அஜித் குமார் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐரோப்பா கார் பந்தயத்தில் பங்கேற்க போவதாக தெரிவித்தார். மேலும், துபாய் ரேஸிங் ட்ராக்கில் அஜித் பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்களையும் பதிவிட்டார்.