சென்னை: 2024ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல்வேறு ஜானர்களில் வெற்றிப் படங்கள் வெளியாகியுள்ளது. பெரிய பட்ஜெட் படங்கள் முதல் சிறிய பட்ஜெட் படங்கள் வரை மக்களை கவர்ந்து பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்துள்ளது. அவ்வாறு ஒரு படத்தின் வெற்றிக்கு காரணமாக அந்த படத்தின் கதை, திரைக்கதை மட்டும் இல்லாமல், அந்த படத்தின் கதாபாத்திரங்களின் தனித்துவமான நடிப்பும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் 2024 ரசிகர்களை கவர்ந்த சிறந்த கதாபாத்திரங்களை இந்த செய்தியில் காணலாம்.
சிங்கம் புலி: நடிகரும், இயக்குநருமான சிங்கம் புலியை நாம் பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் பார்த்து ரசித்ததுண்டு. அதுமட்டுமின்றி இயக்குநராக அஜித் நடித்த ரெட், சூர்யா நடித்த மாயாவி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். ஆனால் 'மகாராஜா' திரைப்படத்தில் மிகவும் வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதலில் 'மகாராஜா' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க யோசித்ததாக சிங்கம் புலி கூறியிருந்தார். அந்தளவிற்கு எந்த நடிகரும் நடிக்க அச்சப்படும் கொடூரமான கேரக்டரில் அசத்தலான நடிப்பை வழங்கி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
துஷாரா விஜயன்: தனது அறிமுக படமான 'சர்பட்டா பரம்பரை' மூலம் ரசிகர்களை ஈர்த்த துஷாரா விஜயன், இந்த வருடம் 'ராயன்', 'வேட்டையன்' ஆகிய இரண்டு பெரிய படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதில் இரண்டு கதாபாத்திரங்களிலும் நல்ல வித்தியாசம் காட்டியிருந்தார். ராயன் படத்தில் கோபம், பயம் என அனைத்து விதமான உணர்வுகளையும் ரசிகர்களை கவரும்படி வெளிப்படுத்தியிருந்தார். அதேபோல் வேட்டையன் படத்தில் கதையின் மையக் கதாபாத்திரமாக சிறிது நேரம் தோன்றினாலும் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார்.
அட்டகத்தி தினேஷ்: 'லப்பர் பந்து' திரைப்படத்தில் நடிகர் அட்டகத்தி தினேஷ் கதாபாத்திரம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் ஹீரோவாக எந்த நடிகரும் இது போன்ற வயதான கதாபாத்திரத்தில் நடிக்க தயங்குவர். ஆனால் கெத்து தினேஷ் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருந்தார். படத்தில் பல மாஸ் காட்சிகள் இவருக்கு சரியாக பொருந்தியது. லப்பர் பந்து படத்திற்கு பிறகு அட்டகத்தி தினேஷ், கெத்து தினேஷ் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார்.
சுவாசிகா: 'லப்பர் பந்து' படத்தில் அட்டகத்தி தினேஷுக்கு ஜோடியாக நடித்தவர் சுவாசிகா. இந்த படத்தில் தினேஷ், சுவாசிகா கெமிஸ்ட்ரி வரவேற்பை பெற்றதற்கு சுவாசிகாவின் நடிப்பு முக்கிய காரணம். தினேஷ் கிரிக்கெட் விளையாடுவது பிடிக்காமலும், தன் மகளின் காதலை எதிர்க்கும் இடங்களிலும் நடிப்பு முதிர்ச்சியாக இருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். மலையாளத்தில் கதாநாயகியாக நடித்த சுவாசிகா, தமிழில் தைரியமாக மாமியார் வேடத்தில் நடித்ததற்கு ரசிகர்கள் பாராட்டினர். நடிகை சுவாசிகா நடிகர் ஹரிஷ் கல்யாணைவிட வயதில் சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா படத்தில் நடித்து வருகிறார்.