சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் பிற துறை பள்ளிகளில் காலியாக உள்ள 2,582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு பிப்.4ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 130 மையங்களில் நடத்தப்பட உள்ள இந்த தேர்வை 41 ஆயிரத்து 485 பேர் எழுத உள்ளனர். தேர்வு எழுத வருவோர் சாேதனைக்குப் பின் காலை 8.30 மணி முதல் காலை 9.30க்குள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.
தேர்வினைக் கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறையின் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசுத் தேர்வு நடைபெறுவதால், தேர்வு மையத்திற்குள் அனுமதியின்றி நுழையக் கூடாது, அச்சிடப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட தாள்கள் எவற்றையும் தேர்வு அறைக்குள் வைத்திருக்கக் கூடாது, கைப்பேசி, கைக்கணினி, மடிக்கணினி, கணக்கிடும் கருவிகள் போன்றவற்றையும் தேர்வறைக்குள் வைத்திருக்கக் கூடாது உள்ளிட்ட விதிமுறைகள் தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், தேர்வறைக்குள் அறைக் கண்காணிப்பாளர் அல்லது பிற தேர்வர்களிடம் முறை தவறி நடந்தால், அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றாமல். குற்றவியல் செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் தேர்வினைத் தொடர்ந்து எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், அவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளைத் தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு எழுத தடை விதிக்கப்படுவதுடன், காவல்துறை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.