டெல்லி:2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி (GST) வருவாய் 1 லட்சத்து 68 ஆயிரத்து 337 கோடியாக உள்ளதாகவும் இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 12.5 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கான ஜிஎஸ்டி 13.9 சதவீதமும், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீதான் ஜிஎஸ்டி 8.5 சதவீதமும் அதிகரித்து இருப்பதாகவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2024 பிப்ரவரி ஜிஎஸ்டிக்கான நிகர ரீஃபண்ட் 1.51 லட்சம் கோடி ஆகும். இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 13.6 சதவீதம் அதிகம் ஆகும்.
2024 பிப்ரவரி நிலவரப்படி நடப்பு நிதியாண்டின் மொத்த ஜிஎஸ்டி வசூல் 18.40 லட்சம் கோடியாக உள்ளது. இது 2023 - 2024 நிதியாண்டை விட 11.7 சதவீதம் அதிகம் ஆகும். 2023 - 2024 நிதியாண்டின் சராசரி மாத மொத்த ஜிஎஸ்டி வசூல் 1.67 லட்சம் கோடியாக உள்ளது எனவும், இது கடந்த நிதியாண்டின் சராசரி வசூலான 1.5 லட்சம் கோடியை தாண்டி உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.