ஐதராபாத் : இன்னும் ஒரு வாரத்தில் 2023 -2024 நிதி ஆண்டு நிறைவு பெற உள்ளது. மார்ச் 31ஆம் தேதிக்கு முன்பாக வரி செலுத்துதல்களை நிறைவு செய்ய பலர் தீவிரம் காட்டி வருகின்றனர். வரி சேமிப்பு என்பது பலருக்கு அழுத்தத்தை கொடுக்கக் கூடிய வேலைகளில் ஒன்றாகும். காரணம் ஏதாவது ஒன்றின் மூலம் நாம் செலுத்திய வேண்டிய வரியில் இருந்து விலக்கு அல்லது சலுகையின் மூலம் சிறிய தொகையாவது சேமித்து விட முடியாதா என்ற எண்ணம் தான்.
திட்டமிட்டு வரி சேமிப்பு கருவிகளில் முதலீடு செய்வதன் மூலம் வரி செலுத்துவதில் இருந்து பெரிய தொகையை மிச்சப்படுத்தக் கூடிய வாய்ப்புகளை காண முடியும். பல்வேறு வரிக் குறைப்பு மூலதனங்களை ஆராய்வதற்கு முன், வரி சேமிப்பு முதலீடுகளின் முக்கியத்துவத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C மற்றும் பிற பிரிவுகளின் கீழ் வரிகளைச் சேமிக்க வரி செலுத்துபவர்களுக்கு அரசு பல்வேறு வழிகளை வழங்குகிறது. இந்த முதலீடுகள் மூலம் வரிக்கு உட்பட்ட வருவாயைக் குறைப்பது மட்டுமல்லாமல் பணத்தை மிச்சப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது.
80C பிரிவு என்றால் என்ன?
பிரிவு 80C என்பது வருமான வரிச் சட்டம், 1961ல் உள்ள பிரிவுகளில் ஒன்றாகும். இது வரி செலுத்துவோர் வைப்புத் திட்டங்கள் மற்றும் செலவினங்களில் முதலீடு செய்வதன் மூலம் தங்களது வரிக்குட்பட்ட வருமானத்தில் விலக்குகளை பெற அனுமதிக்கிறது. தற்போதைய விதிமுறைகளின் படி, ஒருவர் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை நடப்பு நிதி ஆண்டில் விலக்குகளை பெற முடியும்.
இந்த 80C பிரிவு விதியின் கீழ் ஒருவர் அனைத்து வகையான முதலீடுகள் மற்றும் செலவுகளில் ஒட்டுமொத்தமாக வரியில் இருந்து ஒரு நிதியாண்டிற்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை விலக்கு பெற முடியும் எனக் கூறப்படுகிறது.
வரி சேமிப்புக்கான யுக்திகள்:
1. வரி சேமிப்புக்கு நிலையான வைப்புத்தொகை:வங்கிகளில் வைப்புத்தொகை செய்வது வரிகளை சேமிக்க எளிய அதேநேரம் பயனுள்ள வழியாகும். அவை 80C பிரிவின் கீழ் வரி விலக்குகளை வழங்குகின்றன மற்றும் வட்டி விகிதங்களை தருகின்றன. தங்கள் முதலீடுகளில் பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வருவாயை எதிர்பார்க்கும் தனி நபர்களுக்கு இது பொருந்தக் கூடிய வரி சேமிப்பு வழியாகும்.
A. சேமிப்புக் காலம்: வரி சேமிப்புக்கான வைப்புத் தொகை 5 வருட கால வைப்பு நிதியாக உள்ளது, அதாவது இந்தக் காலத்திற்கு உங்கள் பணம் முதலீடு செய்யப்பட்டிருக்கும்.
B. வரிச் சலுகை:வரிச் சேமிப்பு நீண்ட கால வைப்புத் நிதியில் செய்யப்படும் முதலீடுகள் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு பெற தகுதியுடையவை. மேலும் அதிகபட்ச வரம்பாக ஒரு நிதி ஆண்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை பெற முடியும்.
C.வட்டி வரிவிதிப்பு:வரி சேமிப்பு நீண்ட கால வைப்பு நிதிகளில் பெறப்படும் வட்டிக்கு உங்கள் வருமான வரி அடுக்கின் படி வரி விதிக்கப்படும்.
2. பொது வருங்கால வைப்பு நிதி (PPF):வருங்கால வைப்பு நிதி என்பது அரசால் வழங்கப்படும் நீண்ட கால சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டமாகும். மேலும் இது சிறு சேமிப்புத் திட்டங்களின் வகையின் கீழ் வருகிறது. இது அரசால் வழங்கப்படுவதால், வரி செலுத்துவோருக்கு கிடைக்கும் பாதுகாப்பான முதலீட்டு தேர்வுகளில் இதுவும் ஒன்றாகும். வருங்கால் வைப்பு நிதியில் 80சி பிரிவின் கீழ் வரி விலக்குகளை பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
பல வரி சேமிப்பு முதலீடுகளுடன் ஒப்பிடுகையில், வருங்கால வைப்பு நிதி 15 ஆண்டுகள் நீண்ட ஆயுட்காலத்தை கொண்டுள்ளது. ஏழாவது ஆண்டில் இருந்து பகுதியளவு பணத்தை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பையும் இது வழங்குவதால், தேவைப்படும் பட்சத்தில் தனிநபர் தங்களது சேமிப்பில் ஒரு பகுதியை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.
தற்போதைய வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 2024 நிதி ஆண்டின் கடைசி காலாண்டில் 7.1 சதவிதம் ஆகும். வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் மத்திய அரசால் கட்டுப்படுத்தப்படுவதால் ஒவ்வொரு காலாண்டிலும் அதன் வட்டி விகிதம் என்பது சீரமைக்கப்படும். மேலும் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி மாதந்தோறும் கணக்கிடப்பட்டு, ஆண்டுதோறும் கூட்டப்பட்டு, நிதியாண்டின் இறுதியில் அதாவது மார்ச் 31ஆம் தேதி அந்தந்த பயனர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும். அதேநேரம் பயனர் தனது கணக்கை செயலில் வைத்திருக்க ஆண்டுக்கு குறைந்தபட்ச முதலீடாக 500 ரூபாயாவது மேற்கொள்ள வேண்டும்.
மேலும் வருங்கால வைப்பு நிதி கணக்கின் முதிர்ச்சியைத் தொடர்ந்து, அதை நீட்டிக்க விரும்பினால் ஐந்து வருட இடைவெளியில் நீட்டிக்கப்படலாம். மேலும் நீட்டிக்கப்பட்ட காலம் முழுவதும் புதிய டெபாசிட்களை செய்யத் தேவையில்லை, மேலும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பகுதியளவு திரும்பப் பெறவும் முடியும். மேலும் சம்பாதித்த வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கு வரி இல்லை என்பதால் இதுவும் ஒரு சிறந்த தேர்வாகும்.
3. தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC):தேசிய சேமிப்பு சான்றிதழ் என்பது இந்திய குடிமக்களுக்குக் கிடைக்கும் அரசு ஆதரவு சேமிப்புத் திட்டமாகும். இது ஒரு நிலையான வருமான முதலீட்டு விருப்பமாகும், ஏனெனில் இது அரசால் நிர்ணயிக்கப்பட்ட முன் வரையறுக்கப்பட்ட வட்டி விகிதத்தை வழங்குகிறது.
மேலும், வருமான வரிச் சட்டம், 1961ன் 80C பிரிவின் கீழ் வரி விலக்குகளுக்கு தேசிய சேமிப்பு சான்றிதழ் தகுதி வாய்ந்தது. இது 5 ஆண்டுகள் ஆயுட்காலத்தை கொண்ட. மேலும் இதில் செய்யும் முதலீடுகள் மூலம் உத்தரவாதமான வருமானத்தை பெற முடியும். எனவே, 5 வருட முதலீட்டு திட்டம், பாதுகாப்பு, யூகிக்கக்கூடிய வருமானம் மற்றும் வரிச் சலுகைகளை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இது பொருத்தமான தேர்வாகும்.
தேசிய சேமிப்பு சான்றிதழில் இருந்து பெறப்படும் வட்டி வருமானம் முதலீட்டாளரின் வரி அடைப்புக்குறியின் அடிப்படையில் வரிவிதிப்புக்கு உட்பட்டது. இருப்பினும், என்எஸ்சியில் கிடைக்கும் வட்டி ஒவ்வொரு நிதியாண்டும் முதலீட்டாளருக்கு வழங்கப்படுவதில்லை. என்எஸ்சியில் முதலீடு செய்யக் கூடிய தொகைக்கு உச்ச வரம்பு எதுவும் இல்லை என்றாலும், ஆண்டுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை வரிச் சலுகையை பெற முடியும். தேசிய சேமிப்பு சான்றிதழ் மீதான வட்டி விகிதம் தற்போது 7 புள்ளி 7 சதவீதமாக உள்ளது.
4. மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் (SCSS):60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டம், பிரிவு 80Cயின் கீழ் வரிச் சலுகைகளை வழங்குகிறது. ஒருவர் அதிகபட்சமாக 30 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யலாம். குறிப்பிட்டுள்ளபடி, இந்த திட்டம் மூத்த குடிமக்களுக்கு மட்டுமே.
இருப்பினும், 55 முதல் 60 வயதுடைய ஓய்வு பெற்ற தனிநபர்களும் இதில் முதலீடு செய்யலாம், ஆனால் அவர்கள் ஓய்வூதிய பலன்களைப் பெற்ற ஒரு மாதத்திற்குள் முதலீடு செய்ய வேண்டும். மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்திற்கு 5 ஆண்டுகள் வரை ஆயுட்காலம் உள்ளது. ஆயுட்காலம் முதிர்ச்சி அடைந்த பிறகு கூடுதலாக 3 ஆண்டுகள் வரை நீட்டித்துக் கொள்ளலாம்.
மேலும் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தின் மீதான வட்டி விகிதம் அரசால் நிர்ணயம் செய்யப்படுவதால் மாற்றத்திற்கு உட்பட்டது. இது வழக்கமான வைப்பு நிதிக்கு வழங்கக் கூடிய வட்டி விகிதத்தை காட்டிலும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். மேலும் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யும் போது பிரிவு 80Cயின் கீழ் வரி விலக்கு பெற தகுதி பெறுகின்றன.
அதேநேரம் ஒட்டுமொத்த வரம்பு என்பது 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாகும். ஒரு நிதியாண்டில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில் இருந்து வரும் வட்டி வருமானம் இருந்தால் முழு வரிக்கு உட்பட்டது. மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தின் மீதான வட்டி விகிதம் ஆண்டுக்கு 8 புள்ளி 2 சதவீதம் ஆகும்.
5. சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY):சுகன்யா சம்ரித்தி யோஜனா என்பது பெண் குழந்தைகளின் நலனுக்காக வடிவமைக்கப்பட்ட வரி சேமிப்பு முதலீட்டு திட்டமாகும். குடும்பத்தில் உள்ள 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைக்கு, அதிகபட்சம் 2 பெண் குழந்தைகளுக்கு ஒரு கணக்கு மட்டுமே திறக்க முடியும்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் கணக்கு வைத்து இருப்பவர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். பெண் குழந்தை 21 வயதை அடையும் வரை அல்லது திருமணம் ஆகும் வரை, இந்த திட்டத்தில் முன்னரோ அல்லது ப்ரீமியம் காலத்திலோ பணம் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும், பெண் குழந்தை 18 வயதை அடைந்த பிறகு அல்லது 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு, கல்வி நோக்கங்களுக்காக இந்த திட்டத்தில் முதலீடு செய்த தொகையை பகுதியாக திரும்பப் பெறலாம். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80Cயின் கீழ், சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்ட கணக்கில் செய்யப்படும் பங்களிப்புகள் வரி விலக்கு பெற தகுதியானவை.
அதாவது, உங்கள் மகளின் சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கில் நீங்கள் முதலீடு செய்யும் தொகையின் மூலம் உங்கள் வரிக்குரிய வருமானத்தை குறைக்கலாம், அதிகபட்ச வரம்பாக ஒரு நிதியாண்டுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை வரிச் சலுகை பெற முடியும். மேலும், சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் வட்டி விகிதம் ஆண்டுக்கு 8 புள்ளி 2 சதவீதம் வழங்கப்படுகிறது.
மேலும், சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் மூலம் வரி சேமிப்பு மட்டுமின்றி, வரி இல்லாத வருமானத்தையும் பெற முடியும். சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கின் மூலம் ஈட்டப்படும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகை ஆகிய இரண்டும் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
6. காப்பீடு: ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு குறிப்பிடத்தக்க வரிச் சேமிப்புப் பலன்களை தருகின்றன. காப்பீடுகள் மூலம் வரிக்குரிய வருமானத்தை குறைக்க உதவுவதோடு, ஒட்டுமொத்த வரிப் பொறுப்பையும் குறைக்க முடியும். நம் நாட்டில் வரிச் சேமிப்புக்கு காப்பீடு சிறந்த தேர்வாகும். காப்பீட்டிலும் ஆயுள் மற்றும் மருத்துவம் என இரண்டு வகைகளாக காப்பீடுகள் உள்ளன.
குறிப்பிட்ட கால இடைவெளி அல்லது எண்டோவ்மென்ட் காப்பீடுகளுக்கான பிரீமியம் தொகை செலுத்துவதன் மூலம் வருமான வரி சட்டத்தின் பிரிவு 80Cயின் கீழ் வரிச் சலுகை பெற முடியும். கூடுதலாக, ஆயுள் காப்பீட்டு பாலிசியில் இருந்து பெறப்படும் வருமான முதிர்வு அல்லது பாலிசிதாரருக்கு மரணம் ஏற்பட்டால் பொதுவாக வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10இன் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
அண்மையில் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு வாங்கப்பட்ட பாலிசிகளுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்படாது. ஒரு நிதியாண்டில் செலுத்தப்பட்ட பிரீமியம் 5 லட்ச ரூபாயை தாண்டினால் முதிர்வுத் தொகைக்கு வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
7. தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS): இது தன்னார்வ அடிப்படையிலான வரி சேமிப்பு முதலீட்டு திட்டமாகும், வழக்கமான ஓய்வூதிய வருமானத்தின் மூலம் நிதிப் பாதுகாப்பை இந்த திட்டம் மூலம் பெற முடியும். தனியார் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் உட்பட 18 முதல் 65 வயதுக்குட்பட்ட அனைத்து இந்திய குடிமக்களுக்கும் இந்த திட்டத்தில் பயன் பெற முடியும்.
இதில் இரண்டு வெவ்வேறு வகையிலான கணக்குகள் உள்ளன. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80CCD(1) மற்றும் பிரிவு 80CCD(2) ஆகியவற்றின் கீழ் வரிச் சலுகைகள் பெற முடியும். பிரிவு 80CCD(1)ன் கீழ் வாடிக்கையாளர்கள் தங்களின் சம்பளத்தில் 10% வரை (சம்பளம் பெறும் நபர்களுக்கு) அல்லது மொத்த வருமானம் (சுய தொழில் செய்பவர்களுக்கு) பிடிப்பைக் கோரலாம். கூடுதலாக, வாடிக்கையாளர்கள் 50 ஆயிரம் ரூபாய் வரை விலக்கு கோர முடியும்.
8. ஈக்விட்டி-லிங்க்ட் சேமிப்புத் திட்டங்கள் (ELSS): இது பரஸ்பர நிதிகள் ஆகும். பங்குகள் அல்லது பங்குகளில் முதலீடுகள் மூலம் முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் முதலீடுகள் ஈர்ப்பது, அதன் மூலம் வரிச் சேமிக்க முடியும். இந்த முதலீட்டின் மூலமும் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு பெற முடியும்.
அதேநேரம் ஈக்விட்டி-லிங்க்ட் சேமிப்புத் திட்ட நிதியில் இருந்து வரும் வருமானம் பங்கு சந்தையுடன் தொடர்புடையது மற்றும் பங்கு சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது என்பதால் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டும். அதிக வருமானம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தாலும், அதில் அதிக ஆபத்துகளும் உள்ளன.
9. யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் பிளான்கள் (ULIPs):யூனிட் லிங்க்டு திட்டம் காப்பீடு மற்றும் முதலீடு ஆகிய இரண்டையும் இணைத்து ஒரே பாலிசியாக கொண்ட நிதித் திட்டமாகும். இதில் செலுத்தும் பிரீமியத் தொகையின் ஒரு பகுதி ஆயுள் காப்பீட்டுத் தொகையாகவும், மீதமுள்ள பிரீமியத்தின் ஒரு பகுதி முதலீட்டு நிதிகளின் வரம்பிலும் முதலீடு செய்யப்படுகிறது.
இதில் பங்குகள், கடன் அல்லது பாலிசிதாரர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டின் கலவையும் அடங்கும். இந்த திட்டத்தின் மூலம் செலுத்தப்படும் பிரீமியங்களுக்கு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80Cயின் கீழ் ஆண்டுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரிச சலுகை பெற முடியும்.
10 கடன்கள்:இறுதியாக கடன்கள் மூலம் சில பிரிவுகளில் வருமான வரிச் சலுகை பெற முடியும். வீட்டுக் கடன் மற்றும் கல்விக் கடன் போன்ற சில வகை கடன்கள் மூலம் வருமான வரிச் சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ் வரிச் சலுகைகளை பெற முடியும்.
A. வீட்டுக் கடன்:வீட்டுக் கடனுக்கு செலுத்தும் வட்டியானது வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 24(b)யின் கீழ் அதிகபட்ச வரம்பு 2 லட்ச ரூபாய்க்கும், திருப்பிச் செலுத்தப்பட்ட வீட்டுக் கடன் மூலம் பிரிவு 80Cயின் கீழ் அதிகபட்சமாக ஒரு நிதியாண்டுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரையும் வரி விலக்கு பெற முடியும்.
B. கல்விக் கடன்:உயர் கல்விக்காக வாங்கிய கடனுக்கான வட்டியின் மூலம் வருமான வரிச் சட்டத்தின் 80E பிரிவின் கீழ் முழுமையான தொகையை பிடித்தம் பெறத் தகுதியுடையது. இந்த விலக்குக்கு அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. மேலும் அதிகபட்சம் 8 ஆண்டுகள் அல்லது வட்டி முழுமையாக திருப்பிச் செலுத்தப்படும் வரை இந்த திட்டத்தின் மூலம் வரி விலக்கு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :இந்தியா - EFTA வர்த்தக ஒப்பந்தத்தால் என்ன பயன்? உலகின் பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறுமா? நிபுணர் கூறுவது என்ன? - India Sign Trade Deal With EFTA