டெல்லி:பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு கடந்த 2023 ஜூலை 20ஆம் தேதி தடை விதித்தது. இந்நிலையில், இந்த தடையை மத்திய அரசு இன்று திரும்பப் பெற்றுள்ள நிலையில், இந்த பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளுக்கு மேல் விதிக்கப்பட்ட ஏற்றுமதி வரிக்கும் விலக்கு அளித்துள்ளது. அது மட்டுமின்றி, இந்த பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளின் ஏற்றுமதி, தரை விலையாக ஒரு டன்னுக்கு 490 அமெரிக்க டாலர் என, இந்திய விலைப்படி ரூ.41,022.09 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அறிவிப்பை வெளியிட்ட வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் (டிஜிஎஃப்டி), “பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசிக்கான ஏற்றுமதிக் கொள்கை திருத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்த பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசிக்கான தடையை நீக்கி ஏற்றுமதி வரிக்கும் விலக்கு அளித்துள்ளோம். இந்நிலையில், MEP (குறைந்தபட்ச ஏற்றுமதி விலை) டன் ஒன்றுக்கு USD 490க்கு என்ற விலை நிர்ணயம் அடுத்த உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவரமும், குறைந்தபட்ச ஏற்றுமதி விலையும்: மத்திய அரசின் குடோன்களில் ஏராளமான அரிசி இருப்பு உள்ளது. மேலும், இந்த பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளின் சில்லறை விற்பனை விலையும் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில், இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி வரியில் இருந்து அரசு விலக்கு அளித்ததோடு, புழுங்கல் அரிசி மீதான வரியை 10 சதவீதமாக குறைத்துள்ளது.
இந்நிலையில், இதேபோல் பாஸ்மதி அரிசியின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நீக்குவதற்கும் வரி குறைப்பு குறித்து 15 நாட்களுக்குள் மத்திய அரசு முடிவு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளுக்கான ஏற்றுமதிகளின் இடத்தில் பாஸ்மதி ஏற்றுமதியாக வாய்ப்புள்ளது.
இது ஒருபுறம் இருக்க, இது குறித்து வெள்ளிகிழமை (செப்.27) நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய்த் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி மீதான ஏற்றுமதி வரி இதுவரை 20 சதவீதமாக இருந்தது. இந்த வரி மாற்றங்கள் செப்டம்பர் 27, 2024 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மாத தொடக்கத்தில், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் என்ற நோக்கத்தில் பாஸ்மதி அரிசிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை அரசாங்கம் ரத்து செய்தது. இந்நிலையில், இந்த நிதியாண்டில் ஏப்ரல்-ஜூலை மாதங்களில் 189 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை நாடு ஏற்றுமதி செய்துள்ளது.
இது 2023-24ல் 852.52 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. ஏற்றுமதிக்கு தடை இருந்தபோதிலும், நட்பு நாடுகளான மாலத்தீவு, மொரிஷியஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.