சென்னை: தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் வரை 50 ஆயிரம் ரூபாயை தொடாமல் இருந்த தங்கத்தின் விலை, ஏழு மாதங்களில் 7 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 57 ஆயிரம் ரூபாய் கடந்து விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதற்கான காரணங்கள் குறித்து பொருளாதார வல்லுநர் பேராசிரியர் ஜோதி சிவஞானம் ஈடிவி பாரத் தமிழ் செய்திக்குப் பேசினார்.
ஜோதி சிவஞானம் கூறியதாவது:தங்கம் அதிகம் வாங்குவதால் தான் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் சாதாரண மக்களும் தங்கத்தை வாங்கும் சூழல் அதிகமாக இருக்கிறது. அதேபோல், முதலீட்டுக்காகவும் தங்கத்தை வாங்கி வருகின்றனர். மக்கள் மட்டும் தங்கத்தில் முதலீடு செய்து வந்த நிலையில், தற்போது உலக மத்திய வங்கிகளே தங்கத்தை வாங்கி முதலீடு செய்ய தொடங்கி உள்ளது. குறிப்பாக, வளர்ந்த நாடுகளான சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் மத்திய வங்கிகளுமே தங்கத்தை வாங்கி முதலீடு செய்து வருகின்றனர்.
அமெரிக்காவின் பொருளாதார தடை:குறிப்பாக, பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் தங்கத்தை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல், அமெரிக்கா, ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்திருந்தது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக ரஷ்யா டாலருக்கு நிகராக தங்கத்தை தேர்ந்தெடுத்து, அதில் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர். அதேபோல், அமெரிக்கா சீனாவின் மீதும் பொருளாதர தடை விதிக்கும் என ஒரு எண்ணம் இருப்பதால், சீனாவும் தங்கத்தின் பக்கம் திரும்ப உள்ளது. குறிப்பாக, சீனாவில் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் சரிவு ஏற்பட்டு இருப்பதால் மக்கள் அங்கு தங்கத்தில் முதலீடு செய்ய முன் வந்துள்ளனர்.
அதேபோல, ஐரோப்பிய நாடுகளில் சில நாடுகள் தங்கத்தை விற்பனை செய்து வந்திருந்தனர். சீனா உள்ளிட்ட நாடுகளில் தங்கத்தை வாங்க முன் வந்திருப்பதால் அந்த நாடுகள் தங்கத்தை விற்காமல் கூடுதலாக தங்கத்தை வாங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். டாலர் மதிப்பு வீழ்ச்சியில் இருக்கக் கூடிய சூழலில் இருப்பதால், டாலருக்குப் பதிலாக தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
அதிகரிக்கும் தங்கம் டிமாண்ட்:உலகம் முழுவதும் தங்கத்துக்கான டிமாண்ட் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, கொரோனா பரவல் காலத்திற்குப் பிறகு பல்வேறு நாடுகளின் முன்னேற்றத்திற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் பணப்புழக்கம் அதிகரித்ததால் விலைவாசி உயர்வும் ஏற்பட்டது. இந்தியாவிலும் உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்ந்து வருகிறது. அதேபோல், இந்தியாவில் சேமிக்கும் பணங்களுக்கான வங்கிகளில் வட்டி குறைத்து கொடுக்கப்படுவதால் வங்கியில் முதலீடு செய்வதை தவிர்த்து தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதேபோல தங்கத்தில் முதலீடு செய்வதால் பரிமாற்றம் செய்வதற்கு எளிமையாக இருக்கிறது. தங்க நகைக்கு மட்டுமில்லாமல் முதலீடு செய்வதற்கு தங்கத்தை அதிகம் பேர் தேர்ந்தெடுக்கின்றனர். தற்போது அமெரிக்காவில் தேர்தல் நடைபெற்று வருவதால் அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தை தற்போது வரை குறைக்கவில்லை.