திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் நீட் அகாடமியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்கள் சிலரை அகாடமி உரிமையாளர் பிரம்பால் மிகக் கொடூரமாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று(அக்.18) மாநில மனித உரிமைகள் ஆணையம் தனியார் நீட் அகாடமிக்கு நேரில் சென்று விசாரித்தது.
விசாரணைக்கு பின் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் கூறும்போது, "அகாடமி உரிமையாளர் அடித்ததில் மாணவர்கள் உடம்பில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தியதாக காவல் உதவி ஆய்வாளர் தெரிவித்தார். காவல் உயரதிகாரிகளை விசாரணைக்கு அழைத்தோம். ஆனால், அவர்கள் வரவில்லை. எனவே, மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யும்.
அதன் விசாரணையின் இறுதியில் தீர்வு நிச்சயம் தருவோம். பாதிக்கப்பட்ட மாணவர்களில் இருவர் இளஞ்சிரார்கள். எனவே, இளஞ்சிறார் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும், வாய்ப்பு இருக்கிறது. மாணவர்களை அடித்ததற்கான காரணம் எதுவாக இருந்தாலும் அடித்தது தவறு தான். தனியார் நீட் அகாடமியில் இதுபோன்ற துன்புறுத்தல் நடந்திருப்பதன் மூலம் மாணவர்கள் எந்த அளவுக்கு ஒடுக்குதலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது.
இந்த சம்பவத்தை பெற்றோர்கள் முன்னெடுத்து சென்று இருக்க வேண்டும். இருப்பினும், யாரும் முன்னெடுக்காவிட்டாலும் மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. மனித உரிமைகள் ஆணையம் எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல் செயல்படுவதால், மக்கள் எங்களை நிச்சயமாக நம்பலாம். இந்த வழக்கில் நாங்கள் விசாரிக்க முகாந்திரம் இருக்கிறது" என்றார்.
இதையும் படிங்க : நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்.. மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை
இதுகுறித்து இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, "நீட் தேர்வு மையங்களில் இது போன்ற சம்பவம் தொடர்கதையாக உள்ளது. இந்த விவகாரத்தில் அரசும், காவல்துறையும் மெத்தனமாக செயல்படுகிறது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து இது போன்ற அகாடமிகளை கண்காணிக்க ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்" என்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், "நீட் அகாடமியில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் கடந்த மாதம் 25ம் தேதி நடைபெற்றுள்ளது. ஆனால், தற்போது வரை பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பிலோ, பெற்றோர்கள் தரப்பிலோ காவல் நிலையத்தில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை.
இதனால் நேற்று வரை இவ்விகாரம் வெளியில் தெரியாமல் இருந்திருக்கிறது. அதே சமயம் இங்கு வார்டனாக பணிபுரிந்து வந்த அமீர் உசேன் என்பவர் பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காரணத்திற்காக, அவரை கடந்த அக் 1ம் தேதி வேலையில் இருந்து அகாடமி நிர்வாகம் நீக்கி உள்ளது.
இதனால் அகாடமி மீது பகையில் இருந்த அமீர் உசேன் சில தினங்களுக்கு முன்பு மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகளை மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமாரிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனியார் நீட் அகாடமி மேலப்பாளையம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இருப்பதால் சம்பவம் குறித்து விசாரிக்கும் படி மேலப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளருக்கு ஆணையர் உத்தரவிட்டார். அதன் பெயரில் மேலப்பாளையம் போலீசார் நேற்று 323, 355, 75 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்" என தெரிவித்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்