மதுரை: சென்னை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முன்னாள் பதிவாளர் தற்போதைய பேராசிரியர் ராமகிருஷ்ணன் மீது மதுரையில் உள்ள பிரபல தனியார் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் ஒருவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரில் கொடுத்தார்.
அந்த புகாரில் சென்னை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முன்னாள் பதிவாளர் ராமகிருஷ்ணன் பொறுப்பு பதிவாளராக பணிபுரிந்த போது பணி நிமித்தமாக அவரை சந்தித்தேன். அப்போது என்னை தகாத வார்த்தைகளில் பேசி என்னை சென்னைக்கு தனியாக வர வேண்டும் என கூறினார்.
மேலும், தனக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் கல்வித்துறையில் உயர்ந்த பதவிகளை வாங்கித் தருகிறேன் என்றும் கூறினார். அதுமட்டுமின்றி எனது புகைபடத்தை ஆபாசமாக சித்தரித்து வைத்திருந்தார். இதனை கண்டித்ததால் சிலரை வைத்து என்னை மிரட்டுகிறார் என அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து அந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் முன்னாள் பதிவாளர் இந்த வழக்கு பொய்யாக என் மீது வைக்கப்பட்டுள்ள புகார். போலீசார் என்னை கைது செய்யாமல் இருக்க எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் விதிக்கக் கூடிய நிபந்தனைகளுக்கு முழுமையாக கட்டுப்படுவேன் எனவும் முன்னாள் பதிவாளர் ராமகிருஷ்ணன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: ஆளுநரா, ஆரியநரா? என முதல்வர் காட்டம்.. தவறு செய்தது யார் என கருநாகராஜன் விளக்கம்!
இந்த நிலையில் இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனியார் கல்லூரி முதல்வர் தரப்பில் மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு வாதிடப்பட்டது. அதில் பதிவாளர் பொறுப்பில் உள்ள நபர் இவ்வாறு தரம் தாழ்ந்து அசிங்கமான வார்த்தைகளை வாட்ஸ் அப்பில் பதிவிட்டுள்ளார். மேலும் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து உள்ளார். இவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் அதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்து வாதிட்டனர்.
இந்த வாட்ஸ்அப் (WhatsApp) ஆவணங்களை பார்த்த நீதிபதி ஒரு கல்லூரி பதிவாளர் பேராசிரியர் இவ்வளவு அநாகரிகமாக நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு கல்லூரி முதல்வரையே தனியாக வந்து பாருங்கள். கணவனை அழைத்து வராதீர்கள் என்றெல்லாம் ஏன் சொல்ல வேண்டும் எனவே இவருக்கு முன் ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார். அப்பொழுது மனுதாரர் தரப்பில் முன் ஜாமீன் மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக கூறினர் இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி திரும்ப பெற்றுக் கொள்ள அனுமதித்து முன் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்