தருமபுரி: தருமபுரியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு, விவசாயிகள் தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகளை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.
புரட்டாசி சனி: வழக்கமாக வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமான வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்குத் தேவையான காய்கறி, பழங்களை வாங்கிச் செல்வது வழக்கம். அதன்படி, இன்று (அக்.5) புரட்டாசி சனிக்கிழமை என்பதால், ஏராளமான பொதுமக்கள் காய்கறிகளை வாங்க உழவர் சந்தைக்கு வந்தனர்.
இதையும் படிங்க: மழை எப்போது பெய்யும்? இனி கையிலே அப்டேட் இருக்கு.. தமிழக அரசின் TN-Alert செயலி அறிமுகம்!
47 டன் காய்கறிகள் விற்பனை: இன்றைய சந்தையில் காய்கறிகள் வாங்க 11 ஆயிரத்து 384 நுகர்வோர் வந்துள்ளனர். இதனால் 47 டன் காய்கறிகள், 4 டன் பழங்கள், 2 டன் பூக்கள் ஆகியவை சந்தையில் விற்பனையாகியுள்ளது. இதில் 47 டன் ரூ.23.51 லட்சத்திற்கு விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு காய்கறிகளின் விலை குறைந்து விற்பனையாகியுள்ளது. இதில், தக்காளி கிலோ ரூ.50க்கும், கத்தரிக்காய் கிலோ ரூ.30க்கும், வெண்டைக்காய் ரூ.20க்கும், அவரைக்காய் ரூ.70க்கும், முள்ளங்கி கிலோ ரூ.10க்கும், முருங்கைக்காய் கிலோ ரூ.120க்கும் விற்பனையாகியுள்ளது.
போக்குவரத்து நெரிசல்: கடந்த வாரம் 43 டன் காய்கறிகள் ரூ.18 லட்சத்திற்கு விற்பனையானது. ஆனால், இன்று நுகர்வோரின் வருகை அதிகரிப்பால், 47 டன் காய்கறிகள் ரூ.23 லட்சத்திற்கு விற்பனையானது. உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியதால், கிருஷ்ணகிரி பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து காவலர்கள் சரி செய்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்