தஞ்சாவூர்: பொதுமக்களின் சமையல் பயன்பாட்டில், நாள்தோறும் முக்கிய அங்கம் வகிக்கும் பொருட்களில் தேங்காயும் ஒன்று. இந்த தேங்காய் விலை பொதுவாக ஒரே சீராகத்தான் இருக்கும். எப்போதாவது ஒரு முறை தான் விலை ஏற்றம் இருக்கும். பிறகு, காய்கள் வரத்து அதிகரித்து தானாகவே விலை குறையத் தொடங்கும் என்பது வாடிக்கை.
ஆனால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தேங்காய் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் டன் ஒன்றுக்கு ரூ.28 ஆயிரத்தில் இருந்து தற்போது ரூ.70 ஆயிரம் என ஒன்றரை மடங்கு அளவிற்கு விலை கூடியுள்ளது. இதனால் சில்லறை விலையில் ஒரு காய் ரூ.25 முதல் 30 வரை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, கடும் வெயில் காரணமாக காய்கறிகளின் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், தற்போது தேங்காய் விலையும் உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் மலைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தேங்காய் விலை உயர்வு குறித்து தேங்காய் வணிகர்கள் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், "உரிய மழை இல்லாத சூழலிலும், கடும் வெயில் காரணமாகவும் தென்னை மரங்களில் உள்ள குரும்பைகள் கீழே கொட்டிவிடுவதால், காய்ப்பு குறைந்துள்ளது.
ஆனால், தேங்காயின் தேவை அதிகம் இருப்பதால் அதன் விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள தேங்காய்கள் தான் பெரும்பாலும் வட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இத்தகைய சூழலில், நல்ல மழை பெய்து மரங்களில் மீண்டும் காய் பிடித்து சந்தைக்கு வர குறைந்தபட்சம் 3 முதல் 4 மாதங்கள் வரை ஆகலாம்.