சென்னை:மனிதன் வாழ்வில் தன் அடையாளத்தை சுமந்து செல்லும் காரணியாக இனப்பெருக்கத்தை பார்க்கிறான். இதன் விளைவுதான் மக்கள் தொகை எண்ணிக்கையாகும். இந்நிலையில், இந்த மக்கள் தொகை, மனிதனின் வளர்ச்சியிலும், ஒரு தேசத்தின் வளமையிலும் மிகப்பெரிய தாக்கத்தையும், முக்கியமான மாற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அதாவது, ஒரு நாட்டின் மக்கள் தொகை சக்தி வாய்ந்ததாகவும், பெரும்பான்மை இல்லாமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதை நாம் இக்காலச் சூழலில் காண முடிகிறது.
மக்கள் தொகையும் வரலாறும்: இவ்வாறு உலக நாடுகள் நடத்திக் கொள்ளும் போர்கள் ஒரு புறம் இருக்கும் நிலையில், உள் நாட்டில் ஏற்படும் வறுமை, சுற்றுச்சூழல் மாசுபாடு, வேலைவாய்ப்பின்மை போன்ற விளைவுகள் முக்கியமான தாக்கங்களாகும். இந்த தாக்கம் ஏற்பட காரணம் மக்கள் தொகையும், மனித வளர்ச்சியும் சமநிலையற்ற தன்மையில் இருப்பதாகும். எனவே, மக்கள் தொகையின் முக்கியத்துவத்தை உணர்த்தி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கொண்டாடப்படுவதுதான் “உலக மக்கள் தொகை தினம்”.
இந்த தினமானது ஐக்கிய நாடுகள் சபையால் (UN) 1989ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நிறுவப்பட்டது. இதற்கு காரணமாக அமைந்தது, 1897ஆம் ஆண்டின் மக்கள் தொகை 500 கோடியைத் தாண்டிய எண்ணிக்கையில் இருந்ததாகும். இந்த தினத்தை பரிந்துரைத்தவர் டாக்டர் கே.சி.சகரியா. அவரால் தான் மக்கள் தொகை உயர்வு என்பது நாடுகள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களுள் ஒன்று என்னும் எண்ணம் உருவாகச் செய்தது.
மக்கள் தொகை உயர்வு வளர்ச்சியின் முதல் படி:மக்கள் தொகை அதிகமாக இருந்து மனித வளமும் வளர்ச்சியை நோக்கி இருக்கும் பட்சத்தில், ஒரு நாட்டின் கலாச்சாரமும், பன்முகத்தன்மையும் அதிகரிக்கிறது. அந்த நாட்டின் இளைய சமுதாயம் தொழிலாளத்துவத்தில் ஒன்றினைந்து பாடுபடக்கூடியவையாக இருக்கும். மேலும், மக்கள் மத்தியில் தொழில் முனைவோர் ஆர்வம் காணப்படும். இதனால் ஒரு நாடு சுயசார்பினால் உலக வர்த்தகத்தில் இயங்க முடியும். இவை அனைத்திற்கும் மேல் அரசியல் சார்ந்த வளர்ச்சி சமூக கட்டமைப்பை மேம்படுத்துகிறது. இறுதியில் இவை புதிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திடுவதால் அறிவார்ந்த சமுதாயம் தோன்றி மனித வேற்றுமைகளை தகர்த்தெரிகிறது.
உயர்ந்த மக்கள் தொகையால்:வளர்ச்சி மற்றும் தகுதி என்னும் பண்புகள் மனித தொழில் நுட்ப வள்ர்ச்சியினல் உருவானதாகும். அதன் விளைவுதான் இன்றைய உலகின் ஸ்மாட் ட்ரெண்ட். எனவே, மனித வளம் இல்லாத மக்கள் தொகை வளர்ச்சியால் அனைவரும் அந்தஸ்தை பெருக்கும் அழுத்தத்திற்கு உள்ளாகிறோம். மேலும், இது சமூகத்தில் குற்றங்கள் ஏற்படுத்துவதோடு, மனிதத்தையும் வேரோடு அழிக்கிறது.
இதனைத் தொடர்ந்து உணவு, தண்ணீரி வளத்தில் பற்றாக்குறை உருவாகிறது. இதனால் மக்கள் கொடிய நோயின் பிடியில் சிக்க வாய்ப்பு இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக பாதிப்புகள் உயர மாசுபாடு நிறைந்த சுற்றுச்சூழலுக்கு வழிவகுக்கிறது. அதுமட்டுமின்றி, ஏற்றத் தாழ்வுடைய சமூகம் உருவாகும் வகையில் அரசியல் சீர்குலைவு ஏற்பட்டு, கல்வி போன்ற அத்தியாவசியத் தேவைகள் கூட நிறைவேறப்படாத சூழல் ஏற்படும்.
மக்கள் தொகைக்கு முட்டுப்போட்டு மனித வளர்ச்சிக்கு வித்திடுவோம்: எனவே, இந்த தாக்கங்களில் இருந்து மீள உலக மக்கள் மனித வளர்ச்சியையும், மக்கள் தொகை வளர்ச்சியையும் சமநிலையில் வைத்திருக்க வேண்டும். இதற்கு அறிவார்ந்த சமூக கட்டமைப்பில் கவனம் செலுத்த வேண்டும். ஆண் மற்றும் பெண் என இருபாலர்களுக்கும் திருமண வயதை அதிகரிப்பது, வேறுபாடுகள் இன்றி கல்வி மற்றும் வேலைகளில் ஈடுபட வாய்ப்பளிப்பது, பொது சுகாதார சேவைகளில் இறங்குவது, முறையான பொதுக் கொள்கைகளுடன் நவீன குடும்பத்தை கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் அரசியல் அமைந்திட வேண்டும்.
மக்கள் தொகையில் முதலிடம் பிடித்த இந்தியா:ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியம் (UNFPA) சார்பில் “இணைந்த வாழ்க்கைகள், நம்பிக்கையின் இழைகள்; பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகளில் ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்குக் கொண்டு வருதல்” என்னும் தலைப்பில், உலக மக்கள் தொகை எண்ணிக்கை - 2024 அறிக்கையை வெளியிட்டது.
அதில், உலக அளவில் 144.17 கோடி மக்கள் தொகையுடன் இந்தியா முதலிடத்திலும், சீனா 142.5 கோடி மக்கள் தொகையுடன் அடுத்த இடத்திலும் உள்ளது. மேலும், இந்த அறிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் இந்தியாவின் மக்கள் தொகை 77 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடியில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரட்டிப்பாக போகும் இந்திய மக்கள் தொகை:இந்த அறிக்கையின் விவரங்கள் படி, இந்திய மக்கள் தொகையில் தோராயமாக 24 சதவீதம் பேர் 14 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், 17 சதவீதம் பேர் 10 முதல் 19 வயது வரை உள்ளவர்கள் என்றும் குறிப்பிடுகிறது. இதற்கிடையே 10 முதல் 24 வயதுடையவர்கள் மக்கள் தொகையில் 26 சதவீதமாக இருக்கும் நிலையில், 15 முதல் 64 வயதுடையவர்கள் 68 சதவீதமாக உள்ளனர். மேலும், 7 சதவீதம் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் உள்ளனர். இதன் அடிப்படையில், இந்தியாவில் ஆண்கள் 71 ஆண்டுகள் வரையும், பெண்கள் 74 ஆண்டுகள் வரையும் வாழும் சாத்தியக்கூறுகளாக ஆயுட்காலம் கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு மேட் இன் இந்தியா ஷுக்கள் - சர்வதேச அளவில் கவனம் பெறும் பிகார் தனியார் நிறுவனம்