டெல்லி :அலோபதி உள்ளிட்ட நவீன மருத்துவ முறைகளால் குணப்படுத்த முடியாத நாள்பட்ட நோய்களை பதஞ்சலி நிறுவனத்தின் ஆயுர்வேத தயாரிப்பி பொருட்களால் குணப்படுத்த முடியும் என விளம்பரம் வெளியிட்டதாக அந்நிறுவனத்திற்கு எதிராக இந்திய மருத்துவ கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
இந்த மனுவை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், தவறான விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டாம் என பதஞ்சலி நிறுவனத்தை எச்சரித்தது. இதையடுத்து, பதஞ்சலி நிறுவனத்தின் ஆயுா்வேத பொருள்கள் குறித்து எந்தவொரு தவறான விளம்பரங்களும் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் வெளியிடப்படாது என்று அந்த நிறுவனம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது.
இருப்பினும், சா்ச்சைக்குரிய விளம்பரங்கள் தொடா்ந்து வெளியாகி வந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக கடந்த பிப்ரவரி மாதம் நடந்த விசாரணையின் போது, பதஞ்சலி நிறுவனம் மீது உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது. ஏற்கெனவே அளித்த உறுதிமொழியை மீறியதற்காக, பதஞ்சலி நிறுவனத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் தொடரக் கூடாது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனா்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் யோகா குரு ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிர்வாக இயக்குநர் பாலகிருஷ்ணா ஆகியோர் அண்மையில் மன்னிப்புக் கோரினா். ஆனால், அது வெறும் வாய் வாா்த்தையாக உள்ளது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், மன்னிப்பை நிராகரிப்பதாக தெரிவித்தது.