சமஸ்திபூர்:பீகார் மாநிலம் சமஸ்திபூரில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், முகேஷ் அம்பானி, கவுதம் அதானி ஆகியோரிடம் காங்கிரஸ் கட்சி பணம் வாங்கியதாக கூறிய பிரதமர் அது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
நாட்டின் சுதந்திரத்திற்காக காங்கிரஸ் கட்சி போராடியதன் காரணமாகத் தான் பிரதமர் மோடி இந்தியாவின் பிரதமராக முடிந்தது என்று கார்கே கூறினார். கவுதம் அதானி, முகேஷ் அம்பானி ஆகிய தொழிலதிபர்கள் கருப்பு பணத்தை வழங்கியது குறித்து உண்மை வெளி வந்ததால் காங்கிரஸ் கட்சி அமைதி காப்பதாக பிரதமர் மோடி கூறியது குறித்து பேசிய மல்லிகார்ஜுன கார்கே, அம்பானி, அதானி கருப்பு பண விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அமைதி காப்பதாக பிரதமர் மோடி கூறிய நிலையில், நாங்கள் ஒரு போதும் அமைதி காப்பதில்லை என்றார்.
மேலும், கருப்பு பண விவகாரத்தில் அரசு ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அதானி, அம்பானி ஆகியோர் தொடர்புடைய இடங்களில் ஏன் அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளை கொண்டு மத்திய அரசு சோதனை நடத்தவில்லை என்றும் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார்.
அதானி, அம்பானியிடம் இருந்து காங்கிரஸ் கட்சி கருப்பு பணத்தை பெற்றுக் கொண்டதா? அல்லது பாஜக பெற்றுக் கொண்டதா? என்று கார்கே தெரிவித்தார். நாட்டுக்காக காங்கிரஸ் கட்சி செய்த பங்களிப்புகள் குறித்து பேசிய மல்லிகார்ஜுன கார்கே முன்னாள் பிரதமர்கள் ராஜீவ் காந்தி மற்றும் இந்திரா காந்தி நாட்டு ஒற்றுமைக்காக தங்களது உயிரையே தியாகம் செய்ததாக அவர் கூறினார்.
மேலும், மகாத்மா காந்தி மற்றும் ராஜேந்திர பிரசாத் போன்றவர்களின் போராட்டங்களால் இந்தியர்கள் தங்களது உரிமையை பயன்படுத்துவதற்கான உரிமையைப் பெற்றதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகின்றன.
இதில் கடந்த ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் முதல் மூன்று கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்ற நிலையில், 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 மக்களவை தொகுதிகளுக்கு வரும் மே 13ஆம் தேதி நான்காவது கட்ட மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆந்திராவில் லோடு ஆட்டோ விபத்தில் சிக்கிய ரூ.7 கோடி! வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டுவரப்பட்டதா? வீடியோ வைரல்! - Andra Pradesh RS 7 Crore Seize